Published : 09 Oct 2019 10:31 AM
Last Updated : 09 Oct 2019 10:31 AM

பாரம்பரிய  சீருடையில் கலாச்சாரத்துக்கு மகுடம் சூட்டும் மாணவிகள்

தேனி

ஒவ்வொரு பள்ளியும் கல்வி, தனித் திறன் மேம்பாடு என்று மாணவர்களை வழிநடத்திக் கொண்டிருக்க... தேனி மாவட்டம் கூடலூர் என்எஸ்கேபி.மேல்நிலைப் பள்ளி இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று பாரம்பரிய ஆடை அணிய வைத்து நம் கலாச் சாரத்துக்கு ஒரு மகுடம் சூட்டி வருகின்றனர்.

அரசு உதவி பெறும் இப்பள்ளியின் மாணவிகள் இன்னமும் பாவாடை, தாவணி அணிந்துதான் பள்ளிக்கு வருகின்றனர். இவர்களை பார்க்கையில் 30 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்வுநிலை ஒவ்வொருவரின் மனக்கண்களில் வந்து போகிறது.

நாகரீகம், கலாச்சாரம், தொழில்நுட்பம், உணவுப் பழக்கம் அத்தனையும் 5-ஜி வேகத்தில் சென்று கொண்டிருக்க.. நம் பாரம்பரிய உடையை இதில் தவற விட்டுவிடாமல் இன்னமும் இப்பள்ளி தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மாணவியரின் மதிப்பை உயர்த்தும் பாரம்பரிய சீருடை குறித்து தலைமை ஆசிரியர் சி.முருகேசன் கூறும்போது, பள்ளி நிர்வாகத்தின் வழி காட்டுதலின்படி பாரம்பரிய உடையை சீருடையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஊரைக் கடக்கும் வெளியூர் பயணிகள் எங்கள் மாணவியரைப் பார்த்து ஆர்வமாக பள்ளி குறித்து விசாரிக்கின்றனர் என்றார்.

இதுகுறித்து ஆசிரியை மல்லிகா கூறியதாவது:

ஆடை மட்டுமல்ல. கழுத்து வரை ஜாக்கெட், ஜடையை மடித்து பின்ன வேண்டும். புளோட்டிங் விடக் கூடாது. தாவணியை செருகி பின் பண்ண வேண்டும், ப்ரீஹேர் விடக்கூடாது. 8-ம் வகுப்பு வரை மட்டுமே இரட்டை ஜடை போட வேண்டும் என்று பல்வேறு உடைநேர்த்தி விதிமுறைகள் உள்ளன. போட்டிக்காக வெளி ஊர்களுக்குப் போகும்போது மாணவியரின் பாரம்பரிய உடையைப் பார்த்துப் பலரும் ஆச்சரியப்படுவர். பெரும்பாலும் எங்கள் பள்ளியின் பெயரைக் கேட்காமலே புரிந்து கொள்வார்கள் என்றார்.

மாணவியர் சத்தியஸ்ரீ, சினேகா, ஹேமாஸ்ரீ ஆகியோர் கூறுகையில், "பாவாடை, தாவணி சீருடை அணிவது பெருமையாக இருக்கிறது. இந்த ஆடை எங்கள் மீது கூடுதல் மதிப்பை ஏற்படுத்துவதால் தன்னம்பிக்கை அதிகமாவதுடன் தனித்துவமாகவும் எங்களை உணர்கிறோம்" என்றனர்.

மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாறாதது. ஆனால் அந்த மாற்றம் நம் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும், நம் மண்ணின் பெருமையையும் மேம்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். அந்தவகையில் பாரம்பரிய ஆடையை சீருடையாக வைத்து கம்பீரம் காட்டி வரும் இப்பள்ளி நிர்வாகத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x