

ஆசிரியருக்கான நினைவூட்டல்
ஆசிரியர் பணியில் நேசமுடன் இணைந்து பின்னர் அன்றாடத்தில் சிக்கி அன்பாசிரியராக மலர முடியாமல் தவிக்கும் பலர் உண்டு. பரபரப்பாகப் பாடத்திட்டத்தை நடத்தி முடித்து, மதிப்பெண்ணைத் துரத்திப் பிடிக்கும்படி மாணவர்களிடம் நிர்ப்பந்திக்கும் இயந்திரமாகப் பெரும்பாலோர் உருமாறி நிற்கின்றனர்.
இந்தச் சுழலில் இருந்து விடுபட்டு வாழ்க்கைப் பயணத்தை ஆசுவாசமாக மாணாக்கருக்குப் போதிக்க நம் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் போதி மரம் உண்டா? ஆசிரியத்துவத்துக்கான அறிவு ஒளியைப் பாய்ச்சுகிறது, ‘கற்றலும் கற்பித்தலும்’.
நூலாசிரியரே கூறியிருப்பதுபோல், இதில் ஆசிரியர்களுக்கு எதுவும் புதிதாக எழுதப்படவில்லை. அதற்குப் பதில் ஆசிரியப் பெருமக்கள் தங்களுக்கு தாங்களே நினைவுபடுத்திக் கொள்வதற்கான சிறுசிறு குறிப்புகள் அடங்கிய கருத்துப் பெட்டகமாகத் திகழ்கிறது. பாடப்புத்தகங்களோடு சதாசர்வ காலமும் உழலும் ஆசிரியர்களின் மனதை லேசாக்கப் படப்புத்தகமாக இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
‘கற்றலும் கற்பித்தலும்: ஆசிரிய வழிகாட்டி’
சாலை செல்வம்
கற்றளி பதிப்பகம்
தொடர்புக்கு: 73973 34916
சோதனையும் சாதனையும்
‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்பார்கள். அதே பறவைகள் மோதி விமான விபத்துகள் நிகழ்வது ஏன்? வெளியூர்ப் பயணங்களின்போது நமது உடை, உடைமைகள் அடங்கிய பெட்டிகளை வாகனத்தில் ஏற்றிச் செல்வோம்.
அந்தப் பெட்டிகளால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும். இதற்கான அறிவியல் தீர்வு என்ன? இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோளைச் சுமந்து செல்வது ஏர்வூர்தி (Launch Vehicle). ஆயுதங்களைத் தாங்கிச் செல்வது ஏவுகணை (Missile).
இவற்றுக்கு இடையி லான வித்தியாசம் என்ன? இது போன்ற சந்தேகங்களுக்கு எளிய நடையில் எடுத்துக் காட்டுகளுடன் அறிவியல் விளக்கம் அளிக்கிறது, ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்: சுவாரசிய ஆராய்ச்சி சோதனைகள்’ நூல். அறிவியல் பக்கம் மாணவர்களைக் கவரும் வண்ணம் முப்படைகள் சார்ந்த ஆராய்ச்சிகளை இந்நூல் விவரிக்கிறது.
‘வெள்ளோட்டம் வெல்லட்டும்: சுவாரசிய ஆராய்ச்சி சோதனைகள்’
ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு
திசையெட்டு
தொடர்புக்கு: 91135 13768
அகழாய்வுப் புதிர்கள்
கீழடி, பொருநை அகழாய்வு களின் முடிவுகள் ஒவ்வொரு கட்டமாக வெளிவர வெளிவர, தொல்லி யல் துறையை நோக்கி ஈர்க்கப்படும் மாணவர்களின் எண் ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது.
இருப்பினும் இத்துறை சார்ந்த செய்திகள், உள்ளடக்கங் களைப் பின்தொடரும் பலருக்கு அகழாய்வில் கிடைக்கும் பொருள்களில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் புரியாத புதிராக உள்ளன.
இதில் இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப் பழமையானதாக அறியப்படும் சிந்துவெளி நாகரிகக் குறியீடுகளைக் காட்சிப் படுத்திச் சிறப்புற விளக்கு கிறது, ரோஜா முத்தையா நூலகத்தின் வெளியீடான, ‘Understanding the Script of Indus Valley Civilization: A Visual Guide to the Signs and Symbols’.
சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட பானைகள், ஜாடிகள், தட்டுகள், குவளைகள் முதலான பல்வேறு வடிவங்களில் காணப்படும் வடிவியல் கோடுகள், இலைகள், விலங்கு உருவங்களுக்கான பொருள், சிந்துவெளி எழுத்து வடிவத்துக்கும் திராவிட எழுத்து வடிவத்துக்கும் இடையில் தொடர்புள்ளதா என ஒவ்வொன்றையும் உற்றுநோக்க வாசகரை அழைக்கிறது இந்நூல்.
‘Understanding the Script of Indus Valley Civilization: A Visual Guide to the Signs and Symbols’
சுந்தர் கணேசன்
சித்திரம்: வர்ஷா உயிர்மெய்
ரோஜா முத்தையா நூலகம்
சிந்து சமவெளி ஆராய்ச்சி மையம்
தொடர்புக்கு: 80153 12686
கடிதம் வரையும் கல்வி
இன்றைய மாணவர்களுக்கு வாசிப்பில் நாட்டம் இல்லை, ஒரு வரியைக்கூடப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை என்றெல்லாம் குறை கூறுகிறோம். அவர்களை திசை திருப்பும் அம்சங்களைப் பட்டியலிட்டு அங்கலாய்த்துக் கொள்கிறோம். எல்லாக் காலத்திலும் இளையோருக்குக் கவனச் சிதறல் இருக்கவே செய்திருக்கும்.
அதற்கான காரணிகள்தான் காலத்துக்கு ஏற்ப மாறுபட்டிருக்கும். இந்தச் சிக்கலை ஆசிரியர் ‘கலகல வகுப்பறை’ சிவா நேர்மறையாகக் கையாண்டு, அதற்கு ‘அன்புள்ள பள்ளிக்கு’ எனும் நூல் மூலம் வடிவம் கொடுத்திருக்கிறார்.
மாணவர்களுக்கு மொழிவசப்பட சுயமாக எழுதப் பழக்குவதே முதல் படி. அதிலும் கடிதம் வரைதல் அவர்கள் மனதை வெளிப்படுத்த அருமையான வடிவம். அன்பிற்கினிய பேனா, ஆட்டுக்குட்டி முதல் பேய், ஹிட்லர்வரை தங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது, பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என விதவிதமானவர்களுக்கு மாணவர்கள் எழுதியுள்ள மடல்கள் அவர்களின் படைப்பாற்றலை, தேடலை வெளிக்கொணரும் அறிவுப் பலகை என்பதன் சாட்சி இந்நூல்.
‘அன்புள்ள பள்ளிக்கு...’
கலகல வகுப்பறை சிவா
வெற்றிமொழி வெளியீட்டகம்
தொடர்புக்கு: 97151 68794
கணக்கு வசப்படும்
அடிப்படைக் கருத்துகளில் புரிதலின்றி அறிய முற்பட்டால் வேப்பங்காயாய் கசக்கும் கணிதம்; படிப்படியாகக் கற்றறிந்தால் கனிபோல் இனிக்கும். குழந்தையின் கையைப் பிடித்து நடைபழக்கும் தாய்போல கணிதத்தை அடி மேல் அடி வைத்துக் கற்பிக்கிறது, மெ.பழனியப்பனின் ‘கணக்கு பிணக்கு ஆமணக்கு’ நூல்.
தமிழில் கணித முரண்பாடுகளைப் பற்றிப் பேசும் அரிய நூல் இது. பள்ளி மாணவர்களுக்குப் பெரிதும் குழப்பம் விளைவிக்கும் கணிதக் கருத்துகளின் முடிச்சுகள் இதில் அவிழ்க்கப்பட்டுள்ளன.
ஒவ்வோர் அத்தியாயத்தின் கடைசி பக்கத்தில் ‘முயன்று வெல்க’ எனும் தலைப்பில் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடைய கணிதப் புதிர்கள் கொடுக்கப்பட்டிருப்பது சுவாரசியத்தைக் கூட்டுகிறது. பல வகுப்புகளில் தட்டுத் தடுமாறி கணிதத்தைக் கடந்துவிட்டு, 10ஆம் வகுப்பில் அச்சத்துடன் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள்கூட இதை வாசித்தால் கணக்கு வசப்படும்.
‘கணக்கு பிணக்கு ஆமணக்கு’
மெ.பழனியப்பன்
புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு: 94445 67935