பலவீனமான நரம்புகள்... வலிமையான மனங்கள்! | நட்சத்திரக் குழந்தைகள் 27

பலவீனமான நரம்புகள்... வலிமையான மனங்கள்! | நட்சத்திரக் குழந்தைகள் 27
Updated on
3 min read

பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்தில் நின்றிருந்த எட்டாம் வகுப்பு மாணவி நந்தினி திடீரென்று கீழே விழுந்தாள். உடல் முழு வதும் நடுக்கம். கைகள் இறுகின. பள்ளியில் பரபரப்பு. மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவளுக்கு வலிப்பு நோய் (Epilepsy) இருப்பது கண்டறியப்பட்டது.

மருத்துவர் விளக்கினார்: “இது தொற்றுநோய் அல்ல. சாபமோ, தெய்வக் கோபமோ அல்ல. மூளை நரம்பு செல்கள் தற்காலிகமாக ஒழுங்கற்ற மின்னியல் செயல்பாட்டை உருவாக்குவதால் ஏற்படும் நரம்பியல் நிலை.” தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

போதுமான தூக்கம் அவசியம். வலிப்பு ஏற்பட் டால் என்ன செய்ய வேண்டும் என்பது குடும்பத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பல பரிசோத னைகளுக்குப் பிறகு, இது நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு (Chronic Neurological Condition) என்றனர் மருத்துவர்கள்.

நரம்பியல் பாதிப்பு

மனித உடலின் அனைத்து இயக் கங்களையும் ஒருங்கிணைக்கும் கட்டுப்பாட்டு மையம் மூளை, முதுகுத்தண்டு, புற நரம்பு மண்டலம் (Peripheral Nervous System). இவை இணைந்து உருவாக்கும் நரம்பியல் அமைப்பே நடப்பது, பேசுவது, எழுதுவது, விழுங்குவது, நினைப்பது, நினைவில் கொள்வது போன்ற ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த அமைப்பில் ஏற்படும் நீண்டகால அல்லது முற்றிலும் குணமடையாத பாதிப்புகளே நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு கள் எனப்படுகின்றன. இவை மெதுவாகப் பாதிப்பைக் கூட்டும், சில நேரம் நிலையானவை, அல்லது மீண்டும் மீண்டும் தாக்கக்கூடியவையாக இருக்கலாம்.

இந்தப் பாதிப்புகள் உடல் இயக்கத்தை மட்டுமல்ல; அறிவாற்றல், கவனம், பேச்சு, நினைவாற்றல், சமநிலை, உணர்வு, கற்றல் திறன், சமூகப் பங்கேற்பு ஆகியவற்றையும் பாதிக்கக்கூடும்.

ஒரே நோய் அல்ல

நாள்பட்ட நரம்பியல் பாதிப்புகள் என்பவை குறிப்பிட்ட ஒரு நோயைக் குறிக்கவில்லை. இதில் பார்கின்சன் நோய், மோட்டார் நியூரான் நோய், வலிப்பு நோய், பக்கவாதத்துக்குப் பிந்தைய நரம்பியல் குறைபாடுகள் (Post-stroke Neurological Disabilities) போன்ற பல நிலைகள் இதில் அடங்குகின்றன.

இவற்றின் அறிகுறிகளும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு கை நடுக்கம் முக்கிய அறிகுறியாக இருக்கும். சிலருக்குத் தசை வலிமை குறையும். சிலருக்கு உடல் சமநிலை பாதிக்கப்படலாம். சிலருக்கு நினைவாற்றல், செயல்களைத் திட்டமிடும் திறனில் மாற்றங்கள் ஏற்படலாம்.

தாமதம் ஆபத்து

“இன்னும் கொஞ்ச நாளில் சரியாகிவிடும்” என்கிற இந்த ஒரு வாக்கியம் பல குழந்தைகளின் மறுவாழ்வை தாமதப்படுத்தியுள்ளது.

குழந்தை உட்கார, நிற்க, நடக்கத் தாமதித்தாலோ, குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட் டாலோ, கைகள் அல்லது கால்களில் அசாதாரண விறைப்புத் தன்மை (Spasticity), தளர்ச்சி (Hypotonia), அல்லது ஒருங் கிணைப்பு குறைபாடு (Poor Coordination) இருந்தாலோ, உடனடியாக நரம்பியல் மதிப்பீடு அவசியம். Early Identification, Early Intervention குழந்தையின் செயல்திறனைக் கணிசமாக மேம்படுத்தும்.

மறுவாழ்வு மருத்துவம்

நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு களுக்கான சிகிச்சை என்பது மருந்து மட்டுமல்ல. உடற்பயிற்சி இயக்கத்தை மேம்படுத்துகிறது; தொழில் வழிச் சிகிச்சை அன்றாட வாழ்க்கைத் திறன்களை வளர்க்கிறது; பேச்சுப் பயிற்சி தொடர்புத் திறனை மேம் படுத்துகிறது; சிறப்புக் கல்வி கற்றலை அணுகக்கூடியதாக மாற்றுகிறது; உளவியல் ஆலோசனை மன நலத்தை வலுப்படுத்துகிறது.

தொழில்நுட்பம் எனும் வரம்

குரல் கட்டுப்பாட்டுக் கணினிகள், கண் அசைவு (Eye-Gaze) அடிப் படையிலான தொடர்புக் கருவிகள், ரோபாடிக் நடைப் பயிற்சி (Robotic Gait Training), செயல்திறன் மின்னியல் தூண்டல் சிகிச்சை (Functional Electrical Stimulation), நுண்ணறிவு சக்கர நாற்காலிகள், உடலில் அணியும் உணர்கருவிகள் (Wearable Sensors), மெய்நிகர் மறுவாழ்வு பயிற்சி (Virtual Reality Rehabilitation) போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள், நாள்பட்ட நரம்பியல் பாதிப்புகளுடன் வாழும் நபர்களின் சுயநிறைவு, இயக்கத் திறன், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த முன்னேற்றங்கள் மருத்துவத்தை மட்டுமல்ல, சமூகப் பங்கேற்பையும் விரிவுபடுத்துகின்றன.

உடலுக்குப் பாதிப்பு.. அறிவுக்கு அல்ல

‘1972 மியூனிக் ஒலிம்பிக்’கில் இந்திய ஹாக்கி அணிக்காக வெண்கலப் பதக்கம் வென்று, பின்னர் இந்தியாவின் முன்னணி விளையாட்டு மருத்துவ நிபுணர்களில் ஒருவராக உயர்ந்தவர் டாக்டர் வெஸ் பயஸ்.

தனக்கு பார்கின்சன் நோய் இருப்பது கண்டறியப்பட்டபோதும் அவர் மனம் தளரவில்லை. கை நடுக்கம், உடல் இயக்கத்தில் மந்தம் போன்ற சவால்களை எதிர்கொண்டபோதும், தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை, உடற்பயிற்சி, தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தார்.

<div class="paragraphs"><p>வெஸ் பயஸ்</p></div>

வெஸ் பயஸ்

இந்திய கிரிக்கெட், கால்பந்து, பல சர்வதேச விளையாட்டு வீரர்களின் மருத்துவப் பராமரிப்பில் தனது அனுபவத்தையும் அறிவையும் தொடர்ந்து பகிர்ந்து கொண்டுவந்தார்.

பார்கின்சன் நோய் ஒரு மனிதனின் உடல் இயக்கத்தை மட்டுமே பாதிக்க முடியும்; ஆனால் அவரது லட்சியத்தையும் சமூகத்துக்கான பங்களிப்பையும் தடுக்க முடியாது என்பதற்கு அவரது வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு.

(ஒளிரும்)

- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com

பலவீனமான நரம்புகள்... வலிமையான மனங்கள்! | நட்சத்திரக் குழந்தைகள் 27
சக்கர நாற்காலியில் பறவைகள்! | நட்சத்திரக் குழந்தைகள் 26

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in