

பள்ளி வளாகத்தில் குழந்தைகள் புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு வகுப்பறைக்குள் ஓடினர். கூட்டத்தின் நடுவில், 12 வயது கவின் தனது சக்கர நாற்காலியை மெதுவாகத் தள்ளிக்கொண்டு வந்தான்.
அவனது வகுப்பறை தரைதளத்தில் இருந்தாலும், அங்குச் செல்லும் பாதையில் சிறிய படிக்கட்டு இருந்தது. நாள்தோறும் அதே இடத்தில் அவன் நின்றுவிடுவான். நண்பர்கள் இருவர் சேர்ந்து அவனது சக்கர நாற்காலியைத் தூக்கிக்கொண்டு உள்ளே செல்வார்கள்.
புதிய தலைமை ஆசிரியர் இந்தக்காட்சியை ஒருநாள் கண்டார். மறுநாளே அங்கே சாய்தளம் அமைக்கப் பட்டது. கவின் முதன்முறையாக யாரின் உதவியும் இல்லாமல், வகுப்பறைக்குள் சென்றான்.
அவன் முகத்தில் மலர்ந்த புன்னகை ஒரு குழந்தையின் மகிழ்ச்சி மட்டுமல்ல; அது சிறகு முளைத்த பறவையின் நெகிழ்ச்சி. உடல் இயக்கக் குறைபாடு கொண்ட வர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தடையாக இருப்பது அவர்களின் உடல் அல்ல; அவர்களை மனதில் நினைத்து வடிவமைக்கப்படாத சூழல்தான்.
உடல் இயக்கக் குறைபாடு
எலும்புகள், தசைகள், மூட்டுகள் அல்லது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகளால் நிற்க, நடக்க, படிக் கட்டில் ஏற, உடலைச் சமநிலையில் வைத்திருக்க, கை அல்லது காலை இயக்க சிரமம் ஏற்படுவது உடல் இயக்கக் குறைபாடு (Locomotor Disability). இது பிறவியிலேயே இருக்கலாம்; அல்லது விபத்து, நோய், தொற்று, முதுகுத்தண்டுக் காயம், தசை நோய், மூட்டுப் பாதிப்பு போன்ற காரணங்களால் வாழ்க்கையின் எந்த வயதிலும் ஏற்படலாம்.
ஒரே நிலை அல்ல: உடல் இயக்கக் குறைபாடு உள்ளவர்கள் அனைவரும் ஒரே நிலை கொண்டவர்கள் அல்ல.
பெருமூளை வாதம்: உடல் அசைவுக்குறைபாட்டின் முக்கிய வகைகளில் ஒன்று. குழந்தையின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் தசைக் கட்டுப்பாடு, உடல் சமநிலை, கை-கால் இயக்கம் ஆகியவை பாதிக்கப்படலாம். ஆனால், பெருமூளை வாதம் வந்துவிட்டாலே அறிவுத்திறன் குறைபாடு ஏற்படும் என நினைப்பது தவறு.
போலியோ பாதிப்பு: தடுப்பூசி பரவலாகக் கிடைக்காத காலத்தில் பலர் போலியோவால் பாதிக்கப்பட்டனர். அதன் விளைவாக கை அல்லது கால் தசைகளில் பலவீனம், நடையில் மாற்றம், காலிபர் அல்லது குச்சி தேவை போன்ற நிலைகள் ஏற்பட்டன.
இன்று தடுப்பூசி மூலம் புதிய பாதிப்புகள் குறைந்தாலும், அதன் விளைவுகளுடன் வாழும் பலர் இன்னும் சமூகத்தில் உள்ளனர்.
தசைச் சிதைவு நோய்: தசைகள் படிப்படியாகப் பலவீனமடையும் நிலை இது. ஆரம்பத்தில் ஓடுவதில் சிரமம், படிக்கட்டில் ஏற முடியாமை, அடிக்கடி விழுதல் போன்ற அறிகுறிகள் தோன் றலாம். பின்னர் உதவிக் கருவிகள் தேவைப்படலாம். இந்த நிலைக்கு மருத்துவ கண்காணிப்பு, உடற்பயிற்சி, ஊட்டச்சத்து, சுவாச பராமரிப்பு, குடும்ப ஆதரவு மிக அவசியம்.
முதுகுத்தண்டு காயம்: சாலை விபத்து, உயரத்தில் இருந்து விழுதல் அல்லது பிற காயங்களால் முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்படலாம். முதுகுத்தண்டு பாதிக்கப்படும் பகுதி யைப் பொறுத்து உடலின் கீழ்ப்பகுதி அல்லது சில நேரம் கை, கால் இயக்கங்களும் பாதிக்கப்படலாம்.
உறுப்பு இழப்பு: விபத்து, நீரிழிவு, புற்றுநோய், தொற்று அல்லது பிற மருத்துவக் காரணங்களால் கை அல்லது கால் அகற்றப்பட வேண்டிய நிலையே உறுப்பு இழப்பு (Amputation).
இவற்றைத் தவிர எலும்பு வளர்ச்சிக் குறைபாடுகள், கடுமையான மூட்டு நோய்கள், பிறவிக் குறைபாடுகள், தீக்காயத்துக்குப் பிந்தைய இயக்கக் கட்டுப்பாடுகள் போன்றவை யும் உடல் அசைவுக் குறைபாட்டுக்குள் வரலாம்.
மாரியப்பன்
சிகிச்சையும் மறுவாழ்வும்
வயது, பாதிப்பின் தீவிரம், உடல்நிலை, குடும்பச் சூழல் ஆகியவற்றைப் பொறுத்து உடல் இயக்கக் குறை பாட்டுக்கான சிகிச்சைத் திட்டம் மாறுபடும். பொதுவாக மருத்துவப் பரிசோதனை, உடற்பயிற்சி சிகிச்சை, தொழில் சிகிச்சை, தசை வலிமைப் பயிற்சி, சமநிலைப் பயிற்சி, நடைப் பயிற்சி, வலி மேலாண்மை, அறுவை சிகிச்சை, செயற்கை உறுப்புகள், காலிபர், வாக்கர், ஊன்றுகோல், சக்கர நாற்காலி போன்ற உதவிக் கருவிகள் பயன்படுத்தப்படலாம்.
சில குழந்தைகளுக்கு தொடக்கக் காலத் தலையீடு மிக முக்கியம். தாமதமின்றி மருத்துவம், மறுவாழ்வு, கல்வி ஆதரவு கிடைத்தால் அவர் களின் சுயநிறைவு அதிகரிக்கும். சிகிச்சை என்பது உடலை மட்டும் சரிசெய்வதல்ல. மனநலம், தன்னம்பிக்கை, குடும்ப ஆலோசனை, சமூக உறவு, கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய அனைத்தும் மறுவாழ்வின் பகுதிகளே.
சுதந்திரத்தின் கருவி
உடல் இயக்கக் குறைபாடு உடையவர்களுக்குச் சக்கர நாற்காலிகளே கால்கள். சிலர் சக்கர நாற்காலியை வாழ்க்கையின் தோல்வி போலக் கருதுகிறார்கள். உண்மையில் அதுபலருக்கு சுதந்திரத்துக்கான கருவி.
நடக்க முடியாத ஒருவர் சக்கர நாற்காலி மூலம் பள்ளிக்குச் செல்கிறார், வேலைக்குச் செல்கிறார், நண்பர்களைச் சந்திக்கிறார், பயணம் செய் கிறார், விளையாடுகிறார், சமூகத்தில் பங்கேற்கிறார்.
எனவே, சக்கர நாற்காலி பலவீனத் தின் அடையாளம் அல்ல; அது இயக்க உரிமையின் அடையாளம். சக்கர நாற்காலி பயன்படுத்தும் நபர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவது அவசி யம். சாய்தளம் சரியான சரிவில் இருக்க வேண்டும்.
கதவுகள் அகல மாக இருக்க வேண்டும். கழிப்பறைகள் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும். மேசைகள் சக்கர நாற்காலி நுழையக்கூடிய உயரத்தில் இருக்க வேண்டும்.
பேருந்து, ரயில், அலுவலகம், வகுப்பறை, மருத்துவ மனை ஆகிய அனைத்திலும் சக்கரநாற்காலிப் பயனாளிகளின் தேவைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். முக்கியமாக, சக்கர நாற்காலியைத் தள்ள உதவுவதற்கு முன், முதலில் அந்த நபரிடம் அனுமதி கேட்பது மரியாதையான நடைமுறை.
தங்க மகன்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், உடல் குறைபாட்டை வென்று உலக அரங்கில் சாதித்தவர். சிறு வயதில் ஏற்பட்ட பேருந்து விபத் தால் அவரது வலது கால் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டது.
அந்தத் தடையை வாழ்க்கையின் முடிவாகக் கருதாமல், விளையாட்டில் முன்னேறினார். உடற்கல்வி ஆசிரி யரின் ஊக்கத்தால் உயரம் தாண்டுதல் போட்டியில் கடுமையாகப் பயிற்சி செய்தார்.
2016 ரியோ பாராலிம்பிக்கில் T42 உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார். பின்னர் 2020 டோக்கியோவில் வெள்ளியும், 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலமும் வென்று தொடர்ந்து உலகத் தரத்தில் சாதித்தார். உடல் இயக்கக் குறைபாடு ஒருவ ரின் கனவுகளுக்கு எல்லை விதிக்க முடியாது என்பதை மாரியப்பனின் வாழ்க்கை உணர்த்துகிறது.
(ஒளிரும்)
- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com