

பள்ளிக் கல்வி தொடர்பாக கடந்த ஆண்டு வெளியான குறிப்பிடத்தக்க நூல்கள்:
குழந்தைகளின் கல்வி மீட்பு: கரோனா காலம் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வியை இடைமறித்து அவர்களை வீட்டுக்குள் அடைத்தது; சிறார் பலரைக் குழந்தைத் தொழிலாளி ஆக்கியது; சிலருக்கு மணமுடித்துப் பூட்டிவைத்தது. இப்படித் தாழிடப்பட்ட கல்வியின் கதவுகளை திறந்துவைத்தது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம். ஆசிரியர்கள், உள்ளூர் கல்வித் தன்னார்வலர்களை இணைத்து குழந்தைகளின் வாழ்விடத்துக்கே பள்ளியைக் கொண்டுசேர்த்தது இந்தத் திட்டம்.
பள்ளிக்கூடங்கள் இயல்புநிலைக்குத் திரும்பிய பிறகு ‘வானவில் மன்றம்’ உருவாக்கப் பட்டு, பள்ளி நேரத்துக்குப் பிறகு குழந்தைகளை வழிநடத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் ஈடுபட்ட நூல் ஆசிரியர் மாதவ னுடைய அனுபவங்களின் தொகுப்பு, குழந்தைகள் கல்வி மீட்பு ஆகியவற்றை முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டதே இந்த நூல்.
‘வாழும் தலமெங்கும் வகுப்பறைகள்’
முனைவர் என். மாதவன்
புக் ஃபார் சில்ட்ரன்
தொடர்புக்கு: 04424332924
சமதர்மம் பழகு: ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் நிறைந்த சமூகத்தில் இருந்து பள்ளிக்கூடத்துக்குள் நுழையும் மாணவர்கள், கல்வியின் வழியாகச் சமதர்ம சமூகத்தைக் கட்டமைப்பதற்கான நம்பிக்கையைப் பெற வேண்டும். அத்தகைய நம்பிக்கையையும், தெளிவையும் மாண வர்கள் அடைந்தார்களா என்பதை அறியும்வகையில் பள்ளிக் கல்வி மதிப்பீட்டுமுறை அமைக்கப்பட வேண்டும்.
அத்தகைய மதிப்பீட்டு முறையை வடிவமைக்க உதவக்கூடிய செயல்பாடுகளை உள்ளடக்கியதே, ‘சமூக ஜனநாயகக் கையேடு'. ஜனநாயக விழுமியங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடைமுறைப் படுத்துவது என்பதற்கான செயல்பாடுகளைப் போதனையாக அல்லாமல் பாடல், கதை, நாடகம், விளையாட்டுகள், கேள்வி-பதில், உரையாடல்கள் வடிவில் இந்நூல் முன்வைக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள பாடங்களைக் களச் செயல்பாடுகளுடன் நேரில் நடத்தித் தர பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தயாராக உள்ளது.
‘சமூக ஜனநாயகக் கையேடு',
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை | தொடர்புக்கு: 94456 83660
உனக்குள் புதிய ஆசிரியன்: “ஒரு சின்ன பள்ளிக்கூடத்தில் வழக்கமாக வருவதுபோல அனு என்கிற குழந்தை அன்றும் பள்ளிக்கூடம் வந்திருக்கிறது. தாமதமாக வந்ததற்கு ‘ரெண்டு திட்டு திட்டிவிட்டு’ அடுத்த வேலைக்குப் போய்விட்டேன். ஒரு விபத்தில் சிக்கி அனுயின் அப்பாவும் தாத்தாவும் மருத்துவமனையில் இருக்கிற செய்தி நமக்குத் தெரியாமலேயே போய்விட்டது.
காரணம் விலகல், ஆசிரியர் மாணவர் இடையே இடைவெளி” - இப்படியான தொடர் சுயபரிசோதனைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளும் அரசுப் பள்ளி ஆசிரியர் தேனி சுந்தர். இவர் எழுதி பிரபல இதழ்களில் வெளியான கல்வி குறித்த கட்டுரைகளின் தொகுப்பு ‘உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார்’.
தமிழ்நாடு பள்ளிக் கல்வியின் அனைத்து பரிமாணங்களையும் உற்றுக் கவனித்து பல்வேறு கோணங்களில் அலசும் இந்நூலை ஆசிரியர்கள் வாசித்தால், புதிய ஆசிரியனாக உதித்தெழுவது திண்ணம்.
‘உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்பத் தப்பு சார்’ | தேனி சுந்தர்
வாசல் | தொடர்புக்கு: 9842102133
காலனி கல்வியில் தமிழ்: தமிழ்மொழி ஆரம்பப் பள்ளிகளை ஐரோப்பி யர்கள் தொடங்கியது, அதன் வழியாக பல்வேறு சமூகப்பிரிவினர் இடையே கல்வி பரவியது, பெண் குழந்தைகளின் பள்ளிக் கல்வி, தமிழில் பாட நூல்கள் அச்சிடப்பட்டது உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகளைச் சுவாரசியமாகப் பகுப்பாய்வு செய்கிறது ‘தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும்’.
அத்துடன் இந்தியாவில் ஆங்கில, பிரெஞ்சு, போர்த்துக்கீசிய மொழிவழிப் பள்ளிகள், கல்லூரி கள் ஆரம்பிக்கப்பட்டது, சட்டம், மருத்துவம், தொழில்நுட்பம், கலை - அறிவியல் கல்வி பரவியது, தமிழ்வழிக் கல்வி முறையின் வளர்ச்சி முதல் தேக்கம்வரை ஐரோப்பியரின் வருகையால் தமிழ்நாட்டில் காலனியமுறைக் கல்வி எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதன் சாதக, பாதகங்களைச் சமரசமின்றி ஆய்வு கண்ணோட்டத்துடன் இந்நூல் விவரிக்கிறது.
‘தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும்’
எஸ். ஜெயசீல ஸ்டீபன் | தமிழில்: கி.இளங்கோவன்
என்சிபிஎச் | தொடர்புக்கு: 044 2625 1968
கல்வி பற்றிய உரையாடல்: ஆரஞ்சு பழத்தை நீல வண்ணத்தில் வரைகின்றன பிஞ்சு விரல்கள். இதைக் கண்டு ரசிக்க வேண்டிய ஆசிரியரின் மனம் பதறியடித்து, “அது அப்படி அல்ல, இப்படி” என்று குறுக்கிடுகிறது. இந்த இடத்தில் குழந்தையின் கற்பனை வளத்துக்குக் கடிவாளம் போடப்படுகிறது. மாணவரின் படைப்பாற்றலை, தனித்துவத்தை நிராகரித்துவிட்டு கட்டமைக்கப்பட்ட கல்வியைக் கற்கச் சொல்கிறது.
இதற்கு மாற்றாக, ஆசிரியரும் மாணவரும் இணைந்து உரையாடுவதன் மூலமே உண்மையான அறிவு பிறக்கிறது என்கிறது ‘நடந்து நடந்தே சாலை அமைத்தோம்’. கல்வி அறிஞர்கள் பாவ்லோ ப்ரையிரே, ஹார்ட்டன் ஆகியோரின் உரையாடல்களின் தொகுப்பு இந்நூல். கல்வி என்பது இன்னொருவரை நகலெடுப்பது அல்ல. எவ்வித முன்னுதாரணமும் இல்லாத போதும், சுயமாகத் தனது செயல்பாட்டின் வழியாக புதிய பாதையை உருவாக்குவதே மாற்றத்துக்கான கல்வி என்பதை வலியுறுத்துகிறது.
‘நடந்து நடந்தே சாலை அமைத்தோம்’
பாவ்லோ ப்ரையிரே,மைல்ஸ் ஹார்ட்டன் | தமிழில்: சாமி
சிந்தன் புக்ஸ் | தொடர்புக்கு: 094451 23164