அறம் எனும் பெருங்கனவு!

அறம் எனும் பெருங்கனவு!
Updated on: 
2 min read

கருவாகக் குழந்தை உருவானதுமே எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்கிற தேடல் தம்பதியர் பலருக்கு இப்போதெல்லாம் தொடங்கிவிடுகிறது.

நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார வளர்ச்சி, ஆடம்பரங்கள் மீதான பேராசையை உருவாக்கியுள்ளது. ‘பிராண்டட்’ மோகத்தால் அதிக விலைக்கு வாங்குவதே அதிகப் பெருமிதம் என்றாகிவிடுகிறது.

கல்வியும் ‘பிராண்ட்’ ஆகியுள்ளது. பள்ளிக்கு ஏற்பப் பணம். எளிய மக்களும் கூட ‘பிறர் ஏளனமாகப் பேசுவார்கள்' என்கிற பயத்தோடு பள்ளியைத் தேட வேண்டியக் கட்டாயம். பணம், பெருமைக்கு ஏற்பப் பள்ளிகள் மாபெரும் வியாபார மையங்களாக வளர்ந்துள்ளன.

தனி மனிதருக்கு, குடும்பத்துக்கு, சமூகத்துக்குக் கல்வி என்ன தருகிறது? கல்வி குறித்த நமது புரிதல் என்ன? சமூகத்தின் அத்தனை அவலங்களையும் கல்வியால் மட்டுமே மாற்றிவிட இயலுமா? இப்படியான கேள்விகள் விடைதேடி அலைகின்றன.

எதிர்பார்ப்புகள் பல..

‘கல்வி எப்படி இருக்க வேண்டும்?’ என்கிற கேள்வியை, சமூக ஊடகங்களின் வழியே கேட்டிருந்தேன். பல்வேறு பணிகளில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து ஏராளமான பதில்கள் வந்தன.

‘படைப்பாற்றலை வளர்ப்பதாக, குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி, விறு விறுப்பாக, பிரம்மாண்டமாக, அன்றாட வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். தனித் திறமைகளைத் தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

வெறும் புத்தக அறிவோடு நின்றுவிடாமல், மனப்பாடம் செய்வதைத் தவிர்த்து, மாணவர் களின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதாக, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நற்பண்புகளையும், வாழ்வாதாரத்துக்கான திறன்களையும் கற்றுத் தருவதாக இருக்க வேண்டும்.

சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வி சமமாகக் கிடைக்க வேண்டும். வாழ்வை எதிர்கொள்ளத் தேவையான தெளிவைத் தர வேண்டும். கற்றல், கற்பித்தல், ஆசிரியர், மாணவர், வகுப்பறை இவற்றுக்குள் நடைபெறும் ஆகச் சிறந்த ஊடாடலே கல்வி. மனிதர்களை உருவாக்க வேண்டும்.

தன்னையும் சமூகத்தையும் சுற்றுச்சூழலையும் அறிந்துகொண்டு நற்செயலாற்றும் அறிவைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். மெல்ல, சராசரி, வேகமாகக் கற்போர் போன்ற வேறுபாடுகள் இல்லாத கல்வி வேண்டும்.

அன்பையும் உன்னதத்தையும் பகிர்ந்து, சிறகுகள் முளைக்கும் வகுப் பறையாகத் தொடர வெளிச்சம் தரும் கருவியாக, சுயமாகச் சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும். மரத்தடி வகுப்பு, விளையாட்டுக் கல்வி, எதார்த்த சூழல் என அறிதல், உணர்தல் கல்வியே சிறப்பு! ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் வேலை வாங்காமல் குழந்தைகளுக்கு ஏதுவாக இருக்க வேண்டும்.

கல்வியோடு தொழில்நுட்பக் கல்வியும் இணைந்து இருக்க வேண்டும் போட்டி மனப்பான்மை இருக்கக் கூடாது’ - இப்படி ஏராளமான கருத்துகள் வந்தன.

இவை எல்லாமே காலங்காலமாகக் கல்வி மீது அக்கறை கொண்டவர்களின் கனவுகள், எளிய மக்களின் ஆசைகள், நம்பிக்கைகள். இவை ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு ஆழமான கலந்துரை யாடலை மேற்கொள்ளலாம். அதிலிருந்து ஏராளமான கேள்விகள் கிளைக்கும்.

கேள்வியைத் தொடரும் கேள்விகள்

படைப்பாற்றலை வளர்க்கும் கல்வி வேண்டும் என்பதை எடுத்துக்கொள்வோம். படைப்பாற்றல் என்றால் என்ன? கல்வியால் படைப்பாற்றல் வளர்கிறதா? ஒவ்வொரு பாடத்திலும் படைப்பாற்றலுக்கான இடம் என்ன? கற்பித்தலில் படைப்பாற்றலின் பங்கு என்ன? படைப்பாற்றலை வளர்க் கும் செயல்பாடுகளை எவ்வாறு உரு வாக்குவது என ஏராளமான கேள்விகளை எழுப்பி, அவை குறித்துக் கலந்துரையாட முடியும். இப்படி ஆழமாகக் கலந்துரையாடும்போது புதிய சிந்தனைகள், செயல்பாடுகள் உருவாகலாம்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் நமது கல்விமுறை உருவாக்கப்பட்டு இருக்கிறதா? கல்வியின் மீது இவ்வளவு எதிர்பார்ப்புகளை வைத்துள்ளவர்களுக்கு, பள்ளியில் என்ன நிகழ்கிறது, புத்தகங்களில் என்ன பாடங்கள் இருக்கின்றன என்று ஏதேனும் தெரியுமா?

ஆசிரியரின் குரல்

‘வெளியிலிருந்து ஆயிரம் சொல்ல லாம், வகுப்பறைக்குள் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன தெரியுமா?’ என்று ஆசிரியர்கள் எழுப்பும் குரலும் முக்கியமானது. இன்றைய வளரிளம் பருவத்தினரின் நடத்தைச் சிக்கல்கள், பழக்கங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றின் பாதிப்புகளும் ஏராளம்.

தங்கள் பிள்ளையை எவ்வாறு நெறிப் படுத்துவது என்பது தெரியாமல் தவிக்கும் நிலையில், பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள். எனவேதான் சமூகமும் பெற்றோரும் தங்களது தவறுகளை, இயலா மையை மறைக்கக் கல்வி நிறுவனத்தின் மீது குற்றங்களைச் சுமத்துகிறார்கள்.

அறம் மிக்க மனிதராக ஒரு குழந்தையை உருவாக்கும் கல்விமுறை என்பது உலகெங்கும் பெருங்கனவு. கல்வியில் இன்றைய நிலை குறித்து உலக அளவில் ஏராளமான நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் திடுக்கிடும் தகவல்களைச் சொல்கின்றன.

கல்வியில் சிறந்த நாடுகள் என நாம் நம்பும் நாடுகளும் தங்களது கல்வி அமைப்பின் மீது கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளன. கல்வி மீது கேள்விகளை எழுப்பக் காரணமான அறிக்கை என்னதான் சொல்கிறது?

(தொடர்ந்து பேசுவோம்!)

- தொடர்புக்கு: artsiva13@gmail.com

அறம் எனும் பெருங்கனவு!
ஆய்வுபூர்வ சிந்தனையை வளர்ப்பது எப்படி?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in