Published : 25 Oct 2019 10:11 AM
Last Updated : 25 Oct 2019 10:11 AM

தீபத் திருநாளை ஒளிமயமாக்குங்கள்!

தீபாவளி பண்டிகை என்றாலே ஒளி, மகிழ்ச்சி, இனிப்பு, செழிப்பு,கொண்டாட்டம்தான். இந்நாளை குதூகலமாகக் கொண்டாடத்தயாராக இருப்பீர்கள். அதே நேரத்தில் இந்தப் பண்டிகையின்போதுதான் அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் வருடாவருடம் நேர்ந்துவிடுகிறது. இதைத் தவிர்க்க சிலவற்றைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

தீபாவளித் திருநாளை ஒளிமயமாக்கும் பட்டாசுகளை வெடிக்கும்போது நம்முடைய மகிழ்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குஅக்கம் பக்கத்தாரின் மகிழ்ச்சியையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். காலை 6-7, மாலை 7-8 என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்திருக்கும் நேரத்தில் மட்டுமே சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத பட்டாசுகளை வெடியுங்கள்.

பண்டிகை நாளன்று உடுத்தும் ஆடையில் சரிகை போன்ற எளிதில்தீப்பற்றக்கூடிய வேலைப்பாடு இருக்க வாய்ப்புண்டு. ஆகையால்,பட்டாசு வெடிக்கும்போது பருத்தி ஆடையை உடுத்திக் கொள்ளுங்கள். காலணி அணிய மறவாதீர்கள்.

சரி, குறிப்பிட்ட நேரம் மட்டும்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றால் மீதி நேரம் என்ன செய்யலாம்? அதான் தொலைக்காட்சி பெட்டி இருக்கிறதே என்கிறீர்களா! உங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள். அதேநேரத்தில் ‘ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை!’ என்பதுபோல விசேஷ நாட்களும் நம் அம்மாக்களுக்கு ஓய்வு நாளாகக் கிடைப்பதில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தமான உணவு பண்டங்களை தயாரிப்பதிலும் வீட்டைச் சுத்தம் செய்வதிலும் கூடுமானவரை பெற்றோருக்கு உதவுங்கள்.

குடும்பத்தோடும் சுற்றத்தாரோடும் சேர்ந்து தீபத்திருநாளை ஒளி மயமாக்குங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x