

கிஜுபாய் பதேகா, வெரியர் எல்வின், பாத்திமா, நாராயண் மல்ஹர்
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்ரி பாய் புலேவைக் கௌரவிக்கும் விதமாக அவரது பிறந்தநாள் ஆசிரியர் நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிற வாதம் அண்மைக் காலமாக வலுத்து வருகிறது.
இதனையொட்டி சாவித்ரிபாய் புலேவும் அவரின் இணையர் ஜோதிபா புலேவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் குழந்தைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் கல்வி புகட்ட எதிர்கொண்ட சிரமங்கள், தடைகள் பல தகர்த்து அவர்கள் நிகழ்த்திக்காட்டிய சமூகப்புரட்சி பரவலாகப் பேசப்படுகிறது. இதேபோன்று நெடுங்காலமாகக் கொண்டாடத் தவறிய சிறந்த கல்வியாளர்களை, இந்த ஆசிரியர் நாளில் நினைவுகூர்வோம்.
மீசை வைத்த அம்மா
“விளையாட்டுகளே உண்மையான கல்வி. விளையாட்டு மைதானத்தில்தான் அதீத ஆற்றல் பிறக்கிறது” என்றவர் இந்தியாவில் குழந்தை மையக் கற்பித்தல் முறையின் முன்னோடியான கிஜுபாய் பதேகா.
ஆசிரியருக்கு மாணவர் கீழ்ப்படிந்து நடத்தல், மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தல் போன்றவற்றுக்கு எதிராகக் களமாடுவதற்காக, வழக்கறிஞராக இருந்து வந்த இவர் முழுநேர ஆசிரியராக மாறினார்.
குஜராத் பாவ்நகர் பகுதியில் 1920இல் ‘பால மந்திர்’ மழலையர் பள்ளியைத் தொடங்கி அதில் குழந்தைகளுக்கு இயல்பாகக் கற்றல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் விளையாட்டுகள், கதைகள், செயல்வழிக் கற்றலை முதன்மையாகப் பயன்படுத்தினார். பின்னர், ‘தட்சிணாமூர்த்தி பால மந்திர்’ என்கிற மாதிரிப் பள்ளியை நிறுவினார்.
இது அவரது முற்போக்கான கருத்துகளை நடைமுறைப்படுத்தியது. சிறுவர், பெற்றோர், ஆசிரியர்களுக்காக, ‘திவ ஸ்வப்னா’ (தமிழில் ‘பகல் கனவு') உள்ளிட்ட 200 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். வகுப்பறையில் தாய்மை போன்ற அன்பையும் அரவணைப்பையும் வழங்கி, குழந்தை களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த கிஜுபாய் பதேகாவுக்கு ‘மீசை வைத்த அம்மா’ எனும் செல்லப்பெயரை காந்தியடிகள் சூட்டினார்.
காட்டுப் பள்ளி திறந்த ஆங்கிலேயர்
கிறிஸ்துவப் போதகராக இந்தியா வந்து, பழங்குடிகளின் வாழ்க்கைமுறையுடன் முழுமையாக ஐக்கியமானவர் பிரிட்டிஷ் மானுடவியலாளர் வெரியர் எல்வின். ஆங்கிலேயரின் கல்வி முறை, பழங்குடிகளை அவர்களின் மரபில் இருந்து விலக்குவதை 1930களில் கண்டறிந்தார்.
மத்தியப் பிரதே சத்தின் ராய்த்வாடி, பாட்னகாட் போன்ற அடர்ந்த காடுகளில் ‘காட்டுப் பள்ளி’களை உருவாக்கினார். இவற்றில் மத்திய இந்தியப் பகுதிகளைச் சேர்ந்த கோண்ட், பைகா பழங்குடிச் சிறுவர்களின் மொழி, சுயமரியாதையைக் காக்க அவர்களின் சூழலுக்கு ஏற்ற கல்வியைக் கற்பித்தார்.
பாட நூல்களுக்குப் பதிலாகப் பழங்குடி நாட்டுப்புறக் கதைகள், இசை, கலைகளைப் பாடத்திட்டத்தில் சேர்த்தார். விவசாயம், கைவினைப் பொருள்கள், உள்ளூர்ச் சூழலியல் முதலான நடைமுறைத் திறன்களுக்கு முக்கியத்துவம் அளித்தார். முரியா கோண்ட் பழங்குடியினரின் பாரம்பரிய இளைஞர் விடுதியான 'கோட்டுல்' அமைப்பை ஆதரித்து, பழங்குடிச் சமூகமயமாக்கலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத் தினார்.
பழங்குடியினரின் பண்பாட்டை அழிக்காமல் அவர்களின் மரபைப் பாதுகாக்க எல்வின் எடுத்த முயற்சிகளைக் கண்டு ஜவாஹர் லால் நேரு வியந்தார். நேருவின் ஆதரவுடன், வடகிழக்கு எல்லை முகமையின் பழங்குடி மானுடவியல் ஆலோசகராக 1954இல் எல்வின் நியமிக்கப்பட்டார்.
மேலும், பழங்குடி மக்களின் பண்பாடு, மொழிகளைப் பாதுகாக்கும் வகையில் ‘பழங்குடி பஞ்சசீல'க் கொள்கைகளை வகுக்க எல்வினின் சோதனைகள் அடிப்படையாக அமைந்தன.
தனது இறுதி மூச்சுவரை ‘The Tribal World of Verrier Elwin’ எனும் தலைப்பில் எல்வின் வடித்த தன்வரலாறு, அவர் மறைந்து மூன்றே மாதங்களில் 1964 மே மாதத்தில், ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
அடுத்த ஆண்டு இந்நூலுக்கு சாகித்ய அகாடமி விருதளித்து, இந்தியப் பழங்குடியினரின் உரிமைகளுக்காகவும் நலனுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாமனிதருக்கு இந்திய அரசு உரிய மரியாதை செலுத்தியது.
இணைபிரியா கல்வித் தோழிகள்
மகாராஷ்டிரம் புனேவில் ‘பிதேவாடா’ என்கிற, நாட்டின் முதல் மகளிர் பள்ளியையும் முதல் பிராந்திய நூலகத்தையும் சாவித்ரிபாய், ஜோதிபா தம்பதி 1848 ஜன., 1இல் நிறுவியது பலருக்குத் தெரிந்திருக்கும்.
பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளித்த ‘குற்றத்துக்காக’ ஆதிக்கச் சமூகத்தினரின் ஆத்திரத்துக்கு ஆளான இவர்கள், தங்கள் சொந்த ஊரைவிட்டே 1849இல் விரட்டியடிக்கப் பட்டனர்.
அப்போது அவர்களுக்கு அடைக்கலம் தந்தவர்கள் உஸ்மான் ஷேக், பாத்திமா ஷேக் என்கிற உடன்பிறந்தவர்கள். தங்கள் வீட்டில் தங்க இடம் அளித்தது மட்டுமல்லாமல், அந்த இல்லத்தையே பள்ளியாக உருமாற்ற அனு மதித்தனர்.
சாவித்ரிபாயும் பாத்திமாவும் அதுவரை அடிப்படை எழுத்தறிவு மட்டுமே பெற்றிருக்கவே, பள்ளியை நடத்துவதற்கு ஆசிரியர் பயிற்சிப் பெற முடிவெடுத்தனர். அப்போது புனேவில் வசித்த அமெரிக்கக் கிறிஸ்துவப் பெண் போதகரான சிந்தியா ஃபரார் அவர்களுக்கு உயர்கல்வி கற்பித்தார்.
தொழில்முறை ஆசிரியர்களாகத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொண்ட இந்த இணைபிரியா தோழிகள் தங்கள் பள்ளியில் விளிம்புநிலை குழந்தைகளுக்கு உற்சாகமாகப் பயிற்றுவித்தனர். இதனால் வெகுண் டெழுந்த மத அடிப்படைவாதிகள் இருவர் மீதும் கற்களையும் மாட்டுச்சாணத்தையும் அள்ளிவீசினர்.
சற்றும் தளராத ஆசிரியைகள் நேர்கொண்ட பார்வையோடு சாதி, மதம் கடந்து பலருக்குக் கல்விக் கண்ணைத் திறந்து வைத்தனர். 1856வரை இந்தப் பள்ளியில் கற்பித்து வந்த பாத்திமா ஷேக் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியராக அறியப்படுகிறார்.
பாத்திமா ஷேக்கின் துணிவையும் தயாள குணத்தையும் சமூக அக்கறையையும் கௌரவிக்கும் விதமாக, மகாராஷ்டிர உருதுவழி பள்ளிகளின் பாடப்புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு 2014இல் சேர்க்கப்பட்டது.
இரவுப் பள்ளிகளின் முன்னோடி
மும்பைவாழ் குழந்தைத் தொழிலாளர்களுக்கு இரவுப் பாடசாலை களும் கடைநிலை ஊழியர்களுக்கு முதியோர் வகுப்புகளும் 1900 களின் தொடக்கத்திலேயே நடத்தியவர் நாராயண் மல்ஹர் ஜோஷி.
இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் இவர்தான் இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் (1926), ஊதியம் வழங்குதல் சட்டம் (1938) முதலான தொழிலாளர் நலச் சட்டங்கள் பிறப்பிக்க கிரியா வூக்கியாகச் செயல்பட்டவர்.
மேட்டுக்குடி, நடுத்தர வர்க்கத்தினருக்குக் கீழே உள்ள தொழிலாளர் வர்க்கத்தினருக்குக் கல்வி மறுக்கப்பட்டு வந்ததைக் கண்டு, தொழிற் சங்கவாதியான அவர் கொதித்து எழுந்தார்.
மும்பையில் உள்ள குழந்தைத் தொழிலா ளர்கள், ஆலைத் தொழிலாளர்கள் அன்றாடம் ஈவிரக்கமின்றி 12 மணிநேரம்வரை உழைப்புச் சுரண்டலுக்கு ஆளா வதைக் கண்டு மனம் வெதும்பியவர், அவர்களை மீட்க நெகிழ்வான கற்றல் முறையை உருவாக்கினார்.
வழக்கமான பகல்நேரப் பள்ளிக்குச் செல்ல முடியாத அவர்களுக்கு இரவுப் பள்ளிகளின் வலைப் பின்னலை நிறுவினார்.
ஏழைத் தொழிலாளர்களின் நெருக்கடியான குடியிருப்புகள் நிலவொளியில் வகுப்பறை களாகச் சுடர்விட்டன.
அடிப்படை எழுத்தறி வுடன் கணிதம், குடியுரிமை, சுகாதாரம் எனத் தலைமுறை தலைமுறையாக எழுத, படிக்கத் தெரியாதவர்களை அதிகாரப்படுத்தும் கல்வியை ஊட்டினார்.
புதிதாக எழுத, படிக்கக் கற்கும் தொழிலாளர்களுக்குப் புத்தகங்கள், கற்றல் பொருள்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்தார். வேலைக்காகப் படிக்கும் போக்கைப் புரட்டிப்போட்டு உரிமைக்காகப் படி என்றார்.
- susithra.m@hindutamil.co.in