Published : 21 Feb 2023 06:05 AM
Last Updated : 21 Feb 2023 06:05 AM

தூத்துக்குடி | பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்

தூத்துக்குடி: விளாத்திக்குளம் அருகே பள்ளிக்குசெல்ல பேருந்து வசதி இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் அருகேயுள்ள குளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் வைப்பாறு ஊராட்சிக்கு உட்பட்ட கலைஞானபுரம் மற்றும் துலுக்கன்குளம் ஆகிய கடலோர கிராமங்களை சேர்ந்த 65 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இவர்கள் கிராமங்களில் இருந்து பள்ளிக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லை. தினமும் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து கலைஞானபுரம் விலக்கு பகுதிக்கு சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து பள்ளிக்கு செல்ல வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் இயக்கப்படும் பேருந்துகள் விரைவு பேருந்துகளாக இருப்பதால், அவை கலைஞானபுரம் விலக்கில் நின்று செல்வதில்லை.

எனவே, பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி கலைஞானபுரம், துலுக்கன்குளம் கிராமங்களுக்கு அரசு பேருந்து இயக்க வலியுறுத்தி பிப்ரவரி 20-ம்தேதி (நேற்று) குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஏற்கெனவே பெற்றோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி, நேற்று துலுக்கன்குளம், கலைஞானபுரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அந்தந்த கிராமங்களில் உள்ள பொதுவான இடத்தில் அமர வைத்தனர். மாணவ மாணவிகள் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து படிக்க தொடங்கினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், குளத்தூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) விஜயலட்சுமி மற்றும் போலீஸார் துலுக்கன்குளம் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள கோயில் முன்பு இரண்டு கிராமத்துக்கு பள்ளி குழந்தைகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், போக்குவரத்து துறையிடம் பேசி 3 நாட்களுக்குள் கலைஞானபுரம், துலுக்கன்குளம் கிராமங்களில் பள்ளி செல்ல பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி அளித்தார். அதன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக பெற்றோர் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து போலீஸார் வேன் ஒன்றை ஏற்பாடு செய்து, அதில் மாணவ மாணவிகளை குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x