Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளமாக உயர்த்தி காட்டுவோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு

அரசு பள்ளிகள் என்பது வறுமை யின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளமாக உயர்த்திக் காட்டுவோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவரான தொழிலதிபர் எஸ்.எம்.ஹிதாயதுல்லா தனது தந்தை அல்ஹாஜ் எஸ்.முகம்மது முஸ்தபாவின் நினைவாக கட்டப் பட்ட 3 கூடுதல் வகுப்பறை கட்டிடத் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து வகுப்பறைகளை திறந்து வைத்து பேசியதாவது:

பலர் இப்பள்ளிக்கு மிதி வண்டி நிறுத்துமிடம், பள்ளிக் கட்டிடங்கள், கழிப்பறை வசதி போன்றவை வேண்டும் என மனு அளித்தனர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கான மேம்பாட்டு நிதி வரும்போது இப்பள்ளிக்கு முக்கி யத்துவம் அளித்து ஒதுக்கித்தர வேண்டும்.

அரசு பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளமாக நாங்கள் உயர்த்திக் காட்டுவோம் எனச் சொல்வதற்கு காரணம் எங்களை முழுமையாக இயக்கி வருவது தமிழக முதல்வர்தான். இனி வரும் காலங்களில் பள்ளியில் பெண் குழந்தைகளை அதிகமாக சேர்ப்பதற்கான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும், என பேசினார்.

ராமநாதபுரம் ஆட்சியர் சங்கர் லால் குமாவத், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), கரு மாணிக்கம் (திருவாடானை), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உ.திசைவீரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, டாக்டர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ஜனவரி மற்றும் மார்ச்சில் திருப்பு தல் தேர்வு நடத்தப்படும். அதன் பின்னர் மாணவர்கள் ஆண்டுத் தேர்வு மற்றும் அரசு பொதுத்தேர்வு எழுத எளிதாக இருக்கும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x