Last Updated : 05 Oct, 2021 08:17 PM

 

Published : 05 Oct 2021 08:17 PM
Last Updated : 05 Oct 2021 08:17 PM

வேளாண் பல்கலை.யில் சேரலாம்; விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு: நவ.2-ல் தரவரிசை 

கோவை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நடப்புக் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் தேதி வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட 12 பட்டப்படிப்புகள் உள்ளன. மேற்கண்ட பட்டப்படிப்புகள் 18 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் கற்பிக்கப்பட்டு வருகின்றன. நடப்புக் கல்வியாண்டுக்கான (2021-22) இளங்கலைப் பிரிவு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான பணிகள், பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த மாதம் தொடங்கப்பட்டன.

நடப்புக் கல்வியாண்டில் இளங்கலைப் பிரிவில் மாணவ, மாணவிகள் சேரக் கடந்த மாதம் 8-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் மேற்கண்ட பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இளங்கலைப் பிரிவில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் அக்.7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இணையதளம் மூலம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க மாணவ, மாணவிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பிரிவில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, இணையதளம் மூலம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் தேதி வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்பு அக்டோபர் 18-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால், மதிப்பெண்கள் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு, நவம்பர் 2-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x