Published : 13 Sep 2021 03:14 AM
Last Updated : 13 Sep 2021 03:14 AM

தேர்வு நடத்தப்பட்டு 4 ஆண்டுகளாகியும் தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வுப் பட்டியல் வெளியாகாததால் சிறப்பாசிரியர்கள் வேதனை

சிறப்பாசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும், தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வுப் பட்டியல் வெளியாகாததால் பணிக்காக காத்திருப்போர் வேதனை அடைந்துள்ளனர்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளில் 1,325 காலி இடங்களை நிரப்புவதற்காக, 2017 செப்டம்பர் மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அந்த தேர்வில் 35,781 பேர் பங்கேற்றனர். 2018 ஜூலை 27-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஒரு காலியிடத்துக்கு இருவர் என்ற விகிதாச்சார அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2,850 பேர் தேர்வுசெய்யப்பட்டனர்.

பின்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, இறுதி தேர்வுப் பட்டியல் வெளியானது. ஆனால், தமிழ்வழி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால், உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்குகள் முடிவுக்கு வந்தன. 2019-ல் தையல், உடற்கல்வி, ஓவியப் பாடங்களுக்கு புதிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டன. எனினும், தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வுப் பட்டியலை மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை.

தமிழ்வழி ஒதுக்கீடு அல்லாத இதரப் பிரிவுகளில் தேர்வானோர், அடுத்தடுத்து அரசுப் பணியில் சேர்ந்துவிட்டனர்.ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களில், தமிழ்வழி ஒதுக்கீடு கோரியவர்கள் உள்ளிட்ட பலரின் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கவில்லை.

இதையடுத்து, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்வழி, முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடு கோரிய நபர்களில், சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் இணையதளத்தில் வெளியிட்டது.

பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வழியாக சான்றிதழ்கள் பெறப்பட்டன. இவற்றை ஆய்வு செய்யும் பணி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

தங்களோடு தேர்வு எழுதியவர்கள் பணியில் சேர்ந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தமிழ்வழி ஒதுக்கீடு இறுதிப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாதது, அப்பிரிவின் கீழ் காத்திருக்கும் தேர்வர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சான்றிதழ் ஆய்வுப் பணிகளை விரைந்து முடித்து, தமிழ்வழி ஒதுக்கீடு இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள். சிறப்பு ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு இந்த மாதத்துடன் 4 ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x