Last Updated : 25 Aug, 2021 04:17 PM

 

Published : 25 Aug 2021 04:17 PM
Last Updated : 25 Aug 2021 04:17 PM

ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடாவிட்டாலும் அப்பள்ளியைத் திறக்க அனுமதியில்லை: சுற்றறிக்கையால் பரபரப்பு

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு ஆசிரியர் கரோனா தடுப்பூசி போடவில்லை என்றாலும் அப்பள்ளியைத் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், அந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கையால் ஆசிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பள்ளிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளைச் சுற்றறிக்கையாக அனுப்பி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 1,744 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 19,950 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 23-ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இவர்களில் 10,461 ஆசிரியர்கள் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மீதமுள்ள 9,481 ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி போடவில்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மாவட்டக் கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் நேற்று மாலை ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.

அதில், "அனைத்து வகை உயர்நிலை- மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி அன்று பள்ளிகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிக்கு மாணவர்கள் வருகை புரியும்போது அனைத்து ஆசிரியர்களும் கோவிட்-19 தடுப்பூசி போடுவது அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

ஏதேனும் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அப்பள்ளி திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், அவ்வாசிரியர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆகவே, இதில் கவனம் செலுத்தி ஏதேனும் ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் அவர்களைத் தடுப்பூசி போட அறிவுறுத்த அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், ஆசிரியர்களிடையே அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பள்ளி திறக்கப்படாது என்பதை எவ்வாறு ஏற்க முடியும் எனக் கல்வியாளர்களிடையே கேள்வி எழுந்தது. அதையடுத்து, மீண்டும், இன்று இச்சுற்றறிக்கையில் மாற்றம் செய்து மீண்டும் அனுப்பப்பட்டது.

அதில், "ஏதேனும் ஓர் ஆசிரியர் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் அவர்களைத் தடுப்பூசி போட அறிவுறுத்த வேண்டும். மேலும் உடல்நலக் குறைவு, அறுவை சிகிச்சை அல்லது வேறு உடல் சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்கள், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றபின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x