Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’- சட்டம் படித்தவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகம்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

சட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எல்லா துறைகளிலும் அதிக அளவில் உள்ளன என்று ‘இந்து தமிழ் திசை’நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 4 நாட்கள் நடைபெற உள்ளது. கடந்த 8-ம் தேதி நடந்த 14-வது நிகழ்வில் ‘சட்டப் படிப்புகள்’ எனும் தலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றியதாவது:

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.தியாகராஜன்: இப்போதுள்ள கல்விமுறையில் பலவிதமான துறைகள் உள்ளன. அதில், சட்டத் துறை மிகச் சிறந்ததுறையாக உள்ளது. இந்தத் துறையில் நீங்கள் எதை சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம். சட்டம் படித்தால் வழக்கறிஞர் ஆகலாம். சென்னை உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உச்ச நீதிமன்றத்திலும்கூட நீதிபதி ஆகலாம். இன்றைக்கு எல்லாத் துறைகளிலுமே சட்டம்படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களிலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் வழக்கறிஞர்களின் தேவை அதிக அளவில் உள்ளது. வழக்கறிஞர் துறையிலும் பலவிதமான பிரிவுகள் உள்ளன. கன்ஸ்யூமர் கோர்ட், லேபர் கோர்ட், வரித் துறை, சிவில் வழக்கு, கிரிமினல் வழக்கு என பல உள்ளன. இந்தத்துறையில் வாய்ப்புகளும் நிறைய உள்ளன. அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான திறமை நமக்குஇருக்க வேண்டும். யாருக்கும் கட்டுப்பட்டு அடிபணியாமல், பணிஓய்வு என்கிற முடிவில்லாமல் ஆர்வத்துடன் செய்யக்கூடிய சிறந்தபணி வழக்கறிஞர் பணியாகும்.

வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழக ஸ்கூல் ஆஃப் லா துணைப் பேராசிரியர் வி.கார்த்திகேயன்: சட்டக்கல்வி என்பது அனைவருக்கும் தேவையான ஒரு அடிப்படை கல்வி என்கிறபுரிதல் இன்று பலருக்கும் வந்துள்ளது. மற்ற கல்விகளை விட சட்டக்கல்விக்கு ஒரு சிறப்புண்டு. சட்டம்படித்தவர்கள் சமுதாய பொறுப்புணர்வுடன், சமுதாயத்துக்குத் தேவையான சேவைகளையும், ஒரு மனிதன் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் செய்ய வேண்டும். மற்ற படிப்புகள் வெறும் படிப்பை மட்டும்தான் தருகின்றன. சட்டக்கல்வி மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான படிப்பையும் சேர்த்தே தருகிறது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகளின் கீழ் செயல்படும் சட்டக்கல்லூரிகளில் சேர்ந்து சட்டம் பயிலலாம். இந்திய அளவில் இருக்கக்கூடிய நேஷனல் லா ஸ்கூலில் சேர்ந்து சட்டம் படிக்க விரும்பினால் அதற்கு ‘கிளாட்’ (CLAT) நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். மாநில அரசு நடத்தும் சட்டக்கல்லூரிகளில் படிக்க பிளஸ் 2 மதிப்பெண்களின் கட்ஆஃப் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும். பிளஸ் 2-வில் நீங்கள் எந்தப் பாடத்தை எடுத்துப் படித்தவராக இருந்தாலும் சட்டப்படிப்பில் சேர முடியும்.

வருமான வரித் துறை முன்னாள் மூத்த நிலை ஆலோசகரும் வழக்கறிஞருமான என்.முரளிகுமாரன்: சட்டக்கல்வி பயின்றால் கட்டாயம் வேலை உண்டு. வேலையில்லாத வழக்கறிஞர் என்று ஒருவரும் கிடையாது. உங்களுக்கு வரும் வழக்குகள் மூலமாக நீங்கள் பலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. இந்தப் பணியில் மட்டும்தான் லட்சுமியும் சரஸ்வதியும் உங்களுக்கு சேர்ந்தேவருகிறது. இதில் நீங்கள் கற்றுக்கொண்டே இருக்கலாம். உங்கள் முயற்சிக்கு ஏற்றார்போல் வருமானமும் வந்துகொண்டே இருக்கும்.

இன்றைய சமுதாய வளர்ச்சியில் பிராக்டீஸ், பலவகையான பரிமாணங்களை, பலவிதமான வாய்ப்புகளைச் சட்டம் பயின்றவர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்தத் தொழில் செய்ய முதலீடு தேவையில்லை. குறைந்த செலவில் படித்துவிடலாம். அதேநேரத்தில் நிறைய பணமும் சம்பாதிக்கலாம். உங்களின் திறமைக்கேற்ப வருமானமும் சமுதாய உயர்வையும் இந்தத் துறையில் நீங்கள் பெற முடியும். பெரியநிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு வழக்கறிஞர்களின் பணி என்றைக்கும் தேவைப்படுகிற ஒன்றாகும். உலகம் முழுவதும் சென்று பிராக்டீஸ் செய்வதற்கான வாய்ப்பாகவும் இந்தப் படிப்பு அமையும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

இதைத் தொடர்ந்து, சட்டப் படிப்பு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் விரிவாக விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’நாளிதழின் முதுநிலை துணைஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத் தினார்.

இந்த நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி காலேஜ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.youtube.com/user/tamithehindu/videos என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x