Published : 30 Jul 2021 04:34 PM
Last Updated : 30 Jul 2021 04:34 PM

சுவரோவியங்கள் மூலமும் கற்பிப்பு: 'பட்டாம்பூச்சி' அரசுப் பள்ளி ஆசிரியர் குழுவுக்குப் பாராட்டு விழா

திருப்பூர் அருகே ராகல்பாவி அரசு தொடக்கப் பள்ளியில் பட்டாம்பூச்சி என்னும் குழுவினர் சார்பாகப் பள்ளி வகுப்பறை மற்றும் சுற்றுச்சுவர்களில் கல்விசார் படங்கள் வரையும் பணி நடைபெற்றதற்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

பட்டாம்பூச்சிகள் குழு

அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தவும், அரசுப் பள்ளியை நோக்கி மாணாக்கர்களை ஈர்க்கவும் பள்ளியின் கட்டமைப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கிராமப்புற மாணவர்களின் கல்வித் திறனை வளர்ப்பதோடு கல்வி இணைச் செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்துவதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஒரு குழுவை ஆரம்பித்துள்ளனர்.

பட்டாம்பூச்சி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுவில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணி நேரம் தவிர்த்து விடுமுறை நாட்களிலும் தொடர்ச்சியாக அரசுப் பள்ளிகளின் சுவர்களை அழகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாம்பூச்சிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ராஜசேகரன், துணை ஒருங்கிணைப்பாளராக சந்தோஷ்குமார் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இக்குழுவினர் மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளில் இப்பணியினைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதுபோன்ற சுவர் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

சுவர்களும் பாடங்களாகும்

வகுப்பறைச் சூழல் என்பது மாணவர்களின் கற்றல் கற்பித்தல் சூழலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனடிப்படையில் பள்ளி வகுப்பறைச் சுவர்களில் கல்விசார் ஓவியங்களைப் படங்களாக வரைவதன் மூலம் மாணவர்களிடையே நல்ல மனநிலையை உருவாக்க முடியும். அதனடிப்படையில் இப்பணியினை இவர்கள் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர்.

பட்டாம்பூச்சிகளுக்குப் பாராட்டு விழா

உடுமலை ஒன்றியத்தில் முதல்முறையாக ராகல்பாவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பட்டாம்பூச்சி குழுவினரின் ஓவியம் வரையும் பணியானது இரண்டு நாட்கள் இரவு பகல் பாராது தொடர்ந்தது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நேற்று (29-07-2021) மாலை அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவி சுமதி செழியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக உடுமலை வட்டாரக் கல்வி அலுவலர்கள் பிரிட்டோ, சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு அவர்களின் பணியினைப் பாராட்டினர். அரசுப் பள்ளிகளை வலுப்படுத்தும் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று தெரிவித்து, அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

இப்பணியை மிகச் சிறப்பாகச் செய்து கொடுத்தமைக்காகப் பள்ளித் தலைமை ஆசிரியர் சாவித்திரி மற்றும் உதவி ஆசிரியர் கண்ணபிரான் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இப்பணியை மேற்கொள்ளத் தேவையான பொருட்களை வாங்க ராகல்பாவி இளைஞர் நற்பணி மன்றம் உதவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x