Published : 14 Jul 2021 01:40 PM
Last Updated : 14 Jul 2021 01:40 PM

செப்.11-ல் முதுகலை நீட் தேர்வு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

முதுகலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை என்பிஇ எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்தியா முழுவதும் 255 நகரங்களில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடைந்த நிலையில், முதுகலை நீட் தேர்வு தள்ளிப் போனது. இதைத் தொடர்ந்து மருத்துவ இளங்கலைப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் அறிவித்தார். இதையடுத்து நேற்று (ஜூலை) மாலை முதல் ஆன்லைன் மூலம் அதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''நாடு முழுவதும் நடப்பாண்டு முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை செப்டம்பர் 11ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். இளம் மருத்துவத் தேர்வர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

முதுகலை நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைத் தேசியத் தேர்வுகள் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தத் தேர்விலும் கரோனா பாதுகாப்பு விதிகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படும்'' என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: nbe.edu.in மற்றும் natboard.edu.in.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x