Published : 26 Jun 2021 12:33 PM
Last Updated : 26 Jun 2021 12:33 PM

உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள்: தமிழகத்தில் 2 கல்லூரிகளுக்கு இடம்

2021ஆம் ஆண்டில் உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழகத்தில் 2 கல்லூரிகளுக்கு இடம் கிடைத்துள்ளது.

சிஇஓ வேர்ல்ட் பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள், மருத்துவக் கல்லூரிகள், ஃபேஷன், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் எனப் பலவற்றின் பட்டியல் வெளியிடப்படும்.

கல்லூரிகளைப் பொறுத்தவரையில்
1) கல்வி நிறுவனத்தின் மதிப்பு
2) சேர்க்கைத் தகுதி
3) நிபுணத்துவம்
4) உலகளாவிய அளவில் நற்பெயர் மற்றும் செல்வாக்கு
5) ஆண்டு கல்விக் கட்டணம்
6) ஆராய்ச்சி செயல்திறன்
7) மாணவர்களின் மனநிறைவு

ஆகிய 7 காரணிகளின் அடிப்படையில் அவற்றின் தரவரிசை நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள் பட்டியலை சிஇஓ வேர்ல்ட் வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், முதல் இடத்தை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியும், மூன்றாம் இடத்தை பென்சில்வேனியா மருத்துவக் கல்லூரியும் பெற்றுள்ளன.

இந்தியாவில் இருந்து 6 மருத்துவக் கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இதில் 23-வது இடத்தைப் பிடித்துள்ளது. புனே ராணுவ மருத்துவக் கல்லூரி 34-வது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் இரண்டு கல்லூரிகள்

தமிழகத்தில் 2 கல்லூரிகளுக்கு இடம் கிடைத்துள்ளது. அந்த வகையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 49-வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரி 64-வது இடத்தையும் பிடித்துள்ளன.

அதேபோல புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 59-வது இடத்தைப் பிடித்துள்ளது. வாரணாசி மருத்துவக் கல்லூரி 72-ம் இடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x