Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

நாட்டின் வளர்ச்சிக்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்: அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பெருமிதம்

புதிய கல்விக் கொள்கை நம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழா சென்னைகிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தின் விவேகானந்தர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும், பல்கலை.வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்கலை. அளவில் சிறந்து விளங்கிய 69 மாணவர்களுக்கு பதக்கங்களை நேரடியாக வழங்கினார். இதுதவிர தபால் மூலம் 2,738 மாணவர்களுக்கு எம்ஃபில், பிஎச்டி போன்ற ஆய்வுப் பட்டங்கள், 85,247 பேருக்கு இளநிலை பட்டம், 16,720 பேருக்குமுதுநிலை பட்டம் வழங்கப்பட்டன.

விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

கல்வி, தொழில்நுட்பம் மற்றும் அறிவாற்றலில் பழங்காலம் முதலே தமிழகம் சிறந்து விளங்குகிறது. நம் நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டின் சிறப்புகளை பறைசாற்றும் சங்ககால தமிழ் இலக்கியங்கள் இந்தியர்களுக்கு பெருமை சேர்ப்பதாகத் திகழ்கின்றன. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதில் வியப்பில்லை.

கல்வியே மாற்றத்துக்கான சிறந்த ஆயுதம். கல்வியறிவுகொண்ட இளைஞர்களால் மட்டுமேசமூகத்தில் புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்க முடியும். அதற்குசரியான பாதையில் பயணிக்க அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். இவற்றை அடைவதுதான் நமது தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும்.

தற்போதைய நவீன காலத்துக்கேற்ப திறன் மற்றும் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சிறந்த கல்வி முறையை நடைமுறைப்படுத்த தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவற்றில் நம் கலாச்சாரம், பாரம்பரியத்தின் சிறப்புகளும் இடம்பெற வேண்டும்.

புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்தும் பட்சத்தில் நவீன கல்வி முறையில் நாம் அடியெடுத்து வைக்க முடியும். எண்ணற்ற ஆய்வாளர்கள், வல்லுநர்களையும் உருவாக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகம் தேசிய அளவில் சிறந்த தொழில் நுட்பக் கல்வி மையமாகத் திகழ்கிறது. இங்கு மாணவிகள் அதிக அளவில் படித்து பட்டங்கள் பெற்றுவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அறிவாற்றலுடன் இணைந்தகருணையானது ஒரு நாடு முன்னேற்றம் அடைய வழிவகை செய்கிறது. இந்த நடைமுறையை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் கூறினார். முன்னதாக, அண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பா வரவேற்புரை நிகழ்த்தி, ஆண்டு அறிக்கை வெளியிட்டார். பதிவாளர் கருணாமூர்த்தி, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x