Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

‘நிஸ்தா’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 56 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி: மத்திய கல்வி அமைச்சகம் இலக்கு

‘நிஸ்தா’ திட்டத்தின் கீழ் நடப்புஆண்டில் 56 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிஅளிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, கற்பிக்கும் திறனை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ளவும், தொழில்நுட்பத்தை கையாளுவதை கற்றுக்கொள்ளவும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களின் முன்னேற்றத்துக்கான தேசிய முயற்சி (நிஸ்தா) என்ற திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது.

இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு (உயர்கல்வி, மேல்நிலை) தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிஸ்தா திட்டம் மூலம் நாடு முழுவதும் 56 லட்சம்ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கஇலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:

நிஸ்தா திட்டத்தின்கீழ் 2021-22கல்வி ஆண்டில் 56 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜூலையில் தொடங்கஉள்ளது. கரோனா பரவல் காலகட்டத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு இணையவழியில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிஸ்தா திட்டம் குறித்து கூடுதல் தகவல்களை https://itpd.ncert.gov.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். அதேபோல, நடப்பு ஆண்டில் இருந்து நிஸ்தா திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கட்டாயம் பயிற்சி பெறவேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்த உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x