Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: விஐடி சென்னை வளாக கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு நீதிபதி பவானி சுப்பராயன் அறிவுரை

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைமாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிபவானி சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.

விஐடி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாக கல்லூரியின் வருடாந்திர பட்டமளிப்பு விழா,இணைய வழியில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் மற்றும் உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை முடித்த 2,039 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதில் 20 மாணவர்களுக்கு பதக்கங்கள் அளிக்கப்பட்டன. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.பவானி சுப்பராயன் பட்டமளிப்பு உரையாற்றி பேசியதாவது:

இந்த நிகழ்வு, மாணவர்கள் வாழ்க்கையில் அடைந்த மிகப்பெரிய மைல்கல்லாகும். நமது சமூகத்துக்கு விஐடி வேந்தர் விசுவநாதன் மிகப்பெரிய சேவைகளை செய்து வருகிறார். தனது கல்வி நிறுவனங்கள் மூலம் தரமான கல்வியை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் வழங்கி வருகிறார். சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தேசிய அளவிலும், உலக அளவிலும் விஐடி இடம்பிடித்துள்ளது. 2020-ம் ஆண்டுக்கான ஷாங்காய் சிறந்த உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலிலும் விஐடி 9-வது இடத்தை பெற்றுள்ளது. இதற்கு விஐடி நிர்வாகத்தின் திறன்மிக்க செயல்பாடுகளே காரணம்.

விஐடியில் படித்த மாணவர்கள் உலகின் தலைசிறந்த பல்கலை.களுக்கு ஆராய்ச்சியாளர்களாக சென்றுள்ளனர். புதிய கல்விக் கொள்கைக்கு நிகராக விஐடி தனது பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. கரோனா காலகட்டத்திலும் மாணவர்களுக்கு இணையவழியில் சிறப்பாக பாடம் நடத்தியுள்ளது. கரோனா பேரிடர் கல்வியில் பல்வேறு இடர்ப்பாடுகளை தந்தாலும் புதுவிதமான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது. இவற்றை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதற்கு தேவையான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசும்போது, “ஒரு நாட்டின் வளர்ச்சியில் அதன் உயர்கல்வி விகிதம் முக்கிய காரணியாக உள்ளது. கல்விக்கு செய்யும்செலவை அந்த நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடாக கருத வேண்டும். பெண்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவித்தால் குழந்தை திருமணத்தை பெருமளவு தடுக்க முடியும். எனவே, மத்திய, மாநிலஅரசுகள் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் ராம்பாபு கோடாலி வரவேற்புரை நிகழ்த்தினார். இணைவேந்தர்கள் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், எஸ்.நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x