Published : 26 Dec 2020 12:54 PM
Last Updated : 26 Dec 2020 12:54 PM

64 வயதில் நீட் தேர்ச்சி: எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி

40 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து, குழந்தைகளை வளர்த்து, குடும்பத்தைக் கவனித்து, பணி ஓய்வுபெற்ற மனிதர் என்ன செய்வார்? பேரக் குழந்தைகளுடன் நாள் முழுவதும் விளையாட்டு, ஓய்வு, சுற்றுலா, தோட்ட வேலை...? இவை எதையுமே ஜெய் கிஷோர் பிரதான் செய்யவில்லை. வித்தியாசமான ஒரு முடிவை எடுத்தார்.

64 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவ மாணவராகச் சேர்ந்து தனது வெற்றிகரமான இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார் பிரதான். ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், புர்லா பகுதியில் உள்ள அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரியில் (VIMSAR) எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளார்.

தன்னுடைய பயணம் குறித்துப் பேசும் அவர், ''சிறு வயதிலேயே எனக்கு மருத்துவம் படிக்க ஆசை இருந்தது. 1956-ல் பிறந்த நான், 70களில் இண்டர்மீடியட் வகுப்பை முடித்தவுடன் ஒருமுறை மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினேன். அதில் தேர்வாக முடியவில்லை. இன்னோர் ஆண்டை வீணாக்க விரும்பாமல் பி.எஸ்சி. படித்தேன். அப்போதிருந்தே ஏதோ முழுமை பெறாத உணர்வு என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது

படித்து முடித்துவிட்டு, அருகில் இருந்த பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினேன். பின்பு இந்தியன் வங்கியில் வேலை கிடைத்தது. 1983-ல் பாரத ஸ்டேட் வங்கியில் சேர்ந்தேன். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தீராத ஆசையால் வங்கிப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறத் திட்டமிட்டேன். ஆனாலும், குடும்பத்தினரை மனதில் கொண்டு அந்த முடிவைக் கைவிட்டேன்'' என்கிறார் பிரதான்.

40 ஆண்டுகளாகப் படிப்பில் இருந்து தள்ளி இருந்தவரால், நீட் தேர்வுக்கு எப்படித் தயாராகி வெற்றியும் பெற முடிந்தது?

இதுகுறித்தும் விரிவாகப் பேசுகிறார் ஜெய் கிஷோர் பிரதான். அவர் கூறும்போது, ''எனக்கு இரட்டைப் பெண் குழந்தைகள். அவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். பாடங்களில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட மகள்கள், நீட் தேர்வை எழுத என்னை உற்சாகப்படுத்தினர்.

2019-ல் உச்ச நீதிமன்றம், மருத்துவம் படிப்பதற்கான வயது வரம்பை நீக்கியது. இதனால் இன்னும் உறுதியாக, நம்பிக்கையுடன் படித்தேன். கடுமையாக உழைத்து நீட் தேர்வில் தேசிய அளவில் 5,94,380ஆவது இடத்தைப் பிடித்துள்ளேன். மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்துள்ளது.

படித்து முடிக்கும்போது எனக்கு 69 வயது ஆகிவிடும். அதற்குப் பிறகு வேறு இடங்களுக்கு வேலைக்குச் செல்ல உத்தேசம் இல்லை. சொந்தமாக கிளினிக் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்'' என்கிறார் வருங்கால மருத்துவர் ஜெய் கிஷோர் பிரதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x