Published : 16 Nov 2020 03:50 PM
Last Updated : 16 Nov 2020 03:50 PM

கோவை அரசு கலைக் கல்லூரிக்கு தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பதவியேற்பு 

கோவை அரசு கலைக் கல்லூரிக்கு, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இன்று பதவியேற்றார்.

கோவை அரசு கலைக் கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியாற்றி வந்தவர், வி.முரளிதரன். இவர் வால்பாறை அரசு கலைக் கல்லூரி முதல்வராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றார்.

இதையடுத்து கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் க.சித்ரா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியையும் கூடுதலாகக் கவனித்து வந்தார். இந்நிலையில் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் ராமலட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

கோவை அரசு கலைக் கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரை நியமிக்கும் பொருட்டு, கல்லூரி முதல்வர் அனுப்பிய கருத்துரு பரிசீலனை செய்யப்பட்டு, அக்கல்லூரியின் உளவியல் துறைத்தலைவர் த.வீரமணி என்பவரைத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக நியமித்து ஆணையிடப்படுகிறது. இவர் பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார். கல்லூரியின் தேர்வு நிதியில் இருந்து மாதம் ரூ.1,200 மதிப்பூதியம் பெறத் தகுதி பெறுகிறார். அவர் பதவியேற்றவுடன், அது குறித்து விவரத்தைக் கல்லூரி முதல்வர் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை அரசு கலைக் கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக த.வீரமணி இன்று பதவி ஏற்றார். அவருக்குக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x