Published : 18 Oct 2020 07:13 AM
Last Updated : 18 Oct 2020 07:13 AM

தமிழ் மொழியில் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 17 மடங்கு உயர்வு: தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் 2-வது ஆண்டாக அதிகரிப்பு

சென்னை

நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் 2-வது ஆண்டாக அதிகரித்துள்ளது. தமிழ் மொழியில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் 17 மடங்கு உயர்ந்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2020-21-ம் ஆண்டு மாணவர்சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்தமாதம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் இருந்து மட்டும், விண்ணப்பித்த 1 லட்சத்து 21,617 பேரில் 99,610 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில்நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மாணவி அகான்ஷசிங் ஆகியோர் 720-க்கு 720 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த ஜன் 710 மதிப்பெண் எடுத்து தமிழக அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 8-ம் இடத்தையும் பிடித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமார் 644 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்தியஅளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ள இந்தமாணவரின் தந்தை ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற நிலையில், ஆசிரியர்களின் உதவியால் இந்தஆண்டு அதிக மதிப்பெண் எடுத்துள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் முயற்சி செய்தால் முடியும். நிச்சயம்சாதிக்கலாம் என்று ஜீவித் குமார் கூறினார்.

நீட் தேர்வில் தமிழகத்தில் 57,215பேர் உட்பட நாடுமுழுவதும் 7 லட்சத்து 71,500 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 57.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல்தமிழகத்தில் நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு சார்பில் அரசு, அரசுஉதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட 412 இலவச நீட்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற6,692 பேர் நீட் தேர்வை எதிர்கொண்டனர். இதில் 1,615 பேர் தேர்ச்சி பெற்றனர். கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வாசுகி என்ற மாணவி 580 மதிப்பெண்ணும், காஞ்சிபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சக்திவேல் 552 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 300 மதிப்பெண்களுக்கு மேல் 32 பேர் மட்டுமே எடுத்திருந்தனர். இந்த ஆண்டு 89 பேர் எடுத்துள்ளனர். இதில், 300-ல் இருந்து 400 மதிப்பெண்களுக்குள் 70 பேரும், 400 முதல் 500 மதிப்பெண்களுக்குள் 15 பேரும் இடம்பெற்றுள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல்4 பேர் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டுநீட் தேர்வை 1,017 பேர் தமிழ் மொழியில் எழுதினர். இந்த ஆண்டு 17,101பேர் தமிழ் மொழியில் தேர்வை எழுதியுள்ளனர். தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை 17 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக கல்வியாளர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரித்துவருகிறது. 2019-ம் ஆண்டில் 9 சதவீதம் அதிகரித்தது. இந்த ஆண்டும் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இந்த ஆண்டு அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளி மாணவர்களில் பலர் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும். அரசுபள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதஇடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் அதிக அளவில் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகும்.நீட் தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்துதான் அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதனால், இன்னும் 2, 3 ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருத்தப்பட்ட பட்டியல் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகள் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், திரிபுரா மாநிலத்தில் தேர்வு எழுதிய 3,536 பேரில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், உத்தராகண்ட் மாநிலத்தில் தேர்வு எழுதிய 12,047 பேரில் 37,301 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபோல் புள்ளிவிவரங்களிலும் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, தேர்வு முடிவுகள், இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. 2 மணி நேரத்துக்குப் பிறகு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் பட்டியலை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x