Published : 11 Oct 2020 07:28 AM
Last Updated : 11 Oct 2020 07:28 AM

‘இன்ஸ்பைரோ’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி; இளங்கலை படிப்பிலேயே ஆராய்ச்சி வாய்ப்புகள் உருவாக வேண்டும்: இதய அறுவை சிகிச்சை நிபுணர் வலியுறுத்தல்

‘இந்து தமிழ் திசை’, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து ‘இன்ஸ்பைரோ’ என்ற ஆன்லைன் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை வழிகாட்டி நிகழ்ச்சியின் 4-வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் நாளில், விசாகப்பட்டினம் கீதம் பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் ஆய்வுப் பிரிவின் மார்புமற்றும் இதய ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ஆர்.பிரதீப் குமார், ‘எய்ம்ஸ் கல்விமற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள்’என்ற தலைப்பில் உரையாற்றியதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொழில்நுட்பம் நோய் கண்டறிதலில் மட்டுமின்றி சிகிச்சையிலும் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனம் உலக அளவில் முன்னணி மருத்துவ நிறுவனமாக திகழ்கிறது. இங்கு அதிக அளவில் மருத்துவ ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

மரபணு, நரம்பியல் குறைபாடுகள், இதய நோய், வைரஸ் நோய்கள், கல்லீரல் நோய் என பல்வேறு பிரிவுகளில் இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதய நோய்களின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அத்துறையில் ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

உயர்கல்விக்கு செல்வோரில் 0.5 சதவீதத்துக்கும் குறைந்த நபர்களே ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் இளங்கலை பட்டப் படிப்பிலேயே மாணவர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபடுகிறார்கள். நம் நாட்டிலும் அதுபோன்ற சூழலை உருவாக்க வேண்டும்.

ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது எளிதான விஷயம்அல்ல. மருந்தைக் கண்டறிந்தாலும் நேரடியாக சந்தைக்கு கொண்டுசெல்ல முடியாது. பல்வேறு பரிசோதனைகளைக் கடந்த பின்னரேஅதை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்.

இவ்வாறு டாக்டர் பிரதீப் குமார் கூறினார்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சர்குலேஷன் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார்.

இந்த அமர்வின் நிறைவு நாளானஇன்று (ஞாயிறு) சந்திரயான் திட்டமுன்னாள் இயக்குநரும், என்டிஆர்எஃப் தலைவருமான பத்ம டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ‘தொழில் விருப்பமாக ஆராய்ச்சி: வழிகள் மற்றும் வழிமுறைகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

8 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். பங்கேற்க கட்டணம் கிடையாது. மாலை 6 மணி முதல்7 மணி வரை நிகழ்வு நடைபெறும்.

இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவு செய்யவேண்டும். கடந்த நிகழ்வைதவற விட்டவர்கள் https://bit.ly/3jKNAto என்ற யுடியூப் லிங்க்கில் பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு 9003966866 என்ற எண் ணில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x