Last Updated : 08 Oct, 2020 01:56 PM

 

Published : 08 Oct 2020 01:56 PM
Last Updated : 08 Oct 2020 01:56 PM

புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: குறைந்த அளவிலான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன. குறைந்த அளவிலான மாணவர்கள் வருகை புரிந்தாலும் ஆர்வமுடன் இருந்தனர்.

புதுச்சேரியில் ஐந்தாம் கட்ட ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப்பட்ட பின்பு 5-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வருகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பாக வகுப்பறை சுத்தம் செய்தல், மாணவர்களுக்குத் தனிமனித இடைவெளியுடன் இருக்கைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக இன்று 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குச் சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கின. மாணவர்களுக்குத் தங்கள் பாடங்களில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் அதைக் கேட்டுப் புரிந்து கொள்வதற்காக இந்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வகுப்புகள் வாரத்திற்கு ஆறு நாட்கள் நடைபெறும் என்றும், மூன்று நாட்கள் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், மூன்று நாட்கள் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நடைபெறும் என்றும் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வகுப்புகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை. அதே போல வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள், கட்டாயம் பெற்றோர்களின் அனுமதிக் கடிதத்தைக் கொண்டுவரவேண்டும் என்றும் மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு கிடையாது என்பதால் மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வெப்ப அளவு பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோலக் கைகளையும் சுத்தம் செய்தனர். பெற்றோர் ஒப்புதல் கடிதம் பெற்ற பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் வகுப்புகளில் ஒரு பெஞ்சில் இருவர் மட்டுமே அமர வைக்கப்பட்டு, சந்தேகப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கரோனா அச்சம் காரணமாக முதல் நாளான இன்று குறைந்த அளவிலான மாணவர்களே வருகை புரிந்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், "சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லித் தருகிறோம். மதியம் ஒரு மணி வரை வகுப்பு நேரம் இருந்தாலும், படித்து முடித்துவிட்டால் உடனே வீட்டுக்குப் புறப்படலாம்" என்று குறிப்பிட்டனர்.

வரும் திங்கள் முதல் 9, 11-ம் வகுப்புகள் தொடங்க உள்ளன. பள்ளிகள் திறப்பை ஆட்சியர் அருண், கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பள்ளி வந்த மாணவிகள் கூறுகையில், "நீண்ட மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறந்ததில் மகிழ்ச்சி. இணையத்தில் படிப்பதை விட நேரில் படிப்பதுதான் மகிழ்ச்சி. உடன் படித்தோரைச் சந்திப்பது அதைவிட சந்தோஷம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x