Published : 04 Oct 2020 07:02 AM
Last Updated : 04 Oct 2020 07:02 AM

‘இன்ஸ்பைரோ’ - ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி: பொது சுகாதார படிப்பில் ஏராளமான வேலைவாய்ப்புகள்; சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் சுதா ராமலிங்கம் தகவல்

‘இந்து தமிழ் திசை’, தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF), FIITJEE உடன் இணைந்து ‘இன்ஸ்பைரோ’ என்ற ஆன்லைன் பொறியியல் மற்றும் மருத்துவத் துறை வழிகாட்டி நிகழ்ச்சியின் 3-வது அமர்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல்நாள் நிகழ்ச்சியில், கோவை பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரும், சமூக மருத்துவ பேராசிரியையுமான டாக்டர் சுதா ராமலிங்கம், ‘பொது சுகாதாரத்தில் ஆராய்ச்சி, புதிய வாய்ப்புகள்’என்ற தலைப்பில் பேசியதாவது:

பொது சுகாதாரம் என்பது மருத்துவப் பிரிவில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. இதில் அடிப்படைபடிப்பாக இருப்பது எம்பிஎச் எனப்படும் முதுநிலை பொது சுகாதார படிப்பாகும். எம்பிபிஎஸ் டாக்டர்கள், பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி நியூட்ரிஷன், பி.பார்ம், பிஏ சைக்காலஜி பட்டதாரிகள் இதில் சேரலாம்.

இப் படிப்பை ஜிப்மர், எய்ம்ஸ், கொச்சி அமிர்தா நிகர்நிலை பல்கலைக்கழகம், மும்பை டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் படிக்கலாம். மேலும், எம்.எஸ். ஜெனிட்டிக் கவுன்சிலிங், பார்ம்.டி.(ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு),எம்டி கம்யூனிட்டி மெடிஸின் போன்ற மருத்துவப் படிப்புகளும் பொது சுகாதாரம் தொடர்பான படிப்புகள் ஆகும். கம்யூனிட்டி மெடிஸின் படிப்பு கோவை பிஎஸ்ஜி,வேலூர் சிஎம்சி, மணிப்பால் பல்கலை. உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுகிறது.

பொது சுகாதார படிப்பை முடிப்பவர்களுக்கு அரசு மருத்துவத் துறை, தொண்டு நிறுவனங்கள், உலக சுகாதார நிறுவனம், யுனிசெப்போன்ற சர்வதேச அமைப்புகள்,மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள்என பல பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. தற்போது மருத்துவத் துறையில் டேட்டா சயின்ஸ்,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ.) கணிதம், புள்ளியியல் பாடங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. எம்எஸ் பார்மகோமெட்ரிக்ஸ், எம்எஸ் ஜெனிட்டிக் கவுன்சிலிங் போன்ற படிப்புகளும் தற்போது பிரபலமாகி வருகின்றன. இவ்வாறு டாக்டர் சுதா ராமலிங்கம் கூறினார்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சர்குலேஷன் பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார்.

இன்று (ஞாயிறு) நடைபெறும் நிகழ்வில் புதுடில்லி இயக்குநர் ஜெனரல் (ஆர்&எம்) டிஆர்டிஓ, சிறப்பு விஞ்ஞானி டாக்டர் சித்ராராஜகோபால், ‘ஒரு நிலையான சூழலுக்கான பசுமைத் தொழில்நுட்பங்கள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் 9 முதல் 12-ம்வகுப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். கட்டணம் கிடையாது. தினமும் மாலை 6 முதல் 7 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். இதில் பங்கேற்க https://connect.hindutamil.in/event/37-inspiro.html என்ற லிங்க்கில் பதிவு செய்ய வேண்டும். இந்த நிகழ்வைத் தவற விட்டவர்கள் https://bit.ly/3ldff6T என்ற யுடியூப் லிங்க்கில் பார்க்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x