Published : 08 Sep 2020 08:15 PM
Last Updated : 08 Sep 2020 08:15 PM

இறுதிப்பருவ மாணவர்களுக்கு முழுவதும் ஆன்லைனிலேயே தேர்வு; செப்.22 தொடக்கம்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

இறுதிப் பருவ பொறியியல் மாணவர்களுக்கு முழுவதும் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்றும் தேர்வுகள் செப்.22-ம் தேதி தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அனைத்துப் பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதிப் பருவத் தேர்வுகளைக் கட்டாயம் நடத்த வேண்டும் என்று யுஜிசி தெரிவித்தது.

இதையடுத்து இறுதி ஆண்டு இறுதிப் பருவத் தேர்வைத் தவிர்த்து மற்ற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதன் அடிப்படையில், இறுதிப்பருவ கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், ''இறுதிப் பருவத் தேர்வு வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்படும். தேர்வு நடப்பதற்குச் சுமார் ஒரு வாரம் முன்னர், ஆன்லைனில் மாதிரித் தேர்வு நடைபெறும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேர்வுக்கால அட்டவணை பல்கலைக்கழக இணைய தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

மாணவர்கள் தேர்வெழுத கணிப்பொறி, மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் போனில் கேமரா, மைக்ரோபோன், இணையம் ஆகிய வசதிகள் இருக்கவேண்டும். விடையைத் தேர்வு செய்யும் வகையில் Multiple Choice Questions வகையில் தேர்வு நடத்தப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x