Published : 06 Sep 2020 07:48 AM
Last Updated : 06 Sep 2020 07:48 AM

‘இந்து தமிழ் திசை’ - ‘கல்வியாளர்கள் சங்கமம்’ நடத்திய ஆசிரியர் தின கொண்டாட்டம்; சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்குவது ஆசிரியர்களே- சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு

‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்திய ஆசிரியர் தினம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்திரயான் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, ‘சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்கள் ஆசிரியர்களே’ என்று பாராட்டினார்.

செப்.5 - ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 10-க்கும் மேற்பட்ட கல்விநிறுவனங்களுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், கல்வியாளர்கள் சங்கமும் ஒருங்கிணைந்து ‘ஆசிரியர் தின கொண்டாட்டம்’ எனும் ஆன்லைன் வழியேயான நிகழ்ச்சியை நடத்தின.

இந்நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா தலைமையேற்றார். தேசிய நல்லாசிரியர் கவிஞர் தங்கம் மூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். கேபிஆர்சிஏஎஸ் முதல்வர் டாக்டர் எஸ்.பாலுசாமி, செயின்ட் பீட்டர்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் நிறுவனர் டாக்டர் ஜெ.சாம்பாபு, ‘இந்து தமிழ் திசை’ பொதுமேலாளர் டி.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, பாடலாசிரியர் விவேகா, தென்னிந்திய எழுத்தாளர் சங்க செயல் தலைவர்மருது அழகுராஜ், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஊடகவியலாளர் செளதாமணி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர்.

தலைமை விருந்தினராகப் பங்கேற்ற சந்திரயான் திட்ட இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:

கரோனா ஊடரங்கு காலத்திலும்ஆசிரியப் பணியைப் போற்றும் வகையில் ஆசிரியர் தின விழாவை இணையம் வழியே கொண்டாடும் ‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம் ஆகியவற்றுக்கு எனது பாராட்டுகள். ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத தினங்களுள் அவர்களது மாணவப் பருவமும் ஒன்று. மாணவர்கள் உயரங்களைத் தொடுவதற்கு ஆணிவேராக இருப்பவர்கள் ஆசிரியர்களே. சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் உடையதே. இன்றைய ஆசிரியர்கள், நாளைய சமுதாய உயர்வுக்கான மாணவர்களை வகுப்பறைகளில் உருவாக்குகிறார்கள். என் தந்தையே எனது முதல் ஆசானாக இருந்து எனக்கு வழிகாட்டினார்.

ஆசிரியர்கள் விதைக்கும் நல்லசிந்தனைகளை உள்வாங்கி, தன்னை வளப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் இன்றையமாணவர்கள். மாணவர், ஆசிரியர்,அரசு எனும் இந்தக் கூட்டணி சிறந்த சமுதாயத்தை உருவாக்கும்சக்தி படைத்தது. அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது அன்பான ஆசிரியர் தின வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வில், தமிழக அரசின் ‘தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்ஃபார்ம்’ (டிஎன்டிபி), டிஎன் டிஜிட்டல் டீம்,புதுக்கோட்டை விதைக் ‘கலாம்’குழு, காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவற்றுக்கு ‘திசைகாட்டி விருது’ வழங்கப்பட்டது.

அதேபோல், சேலம் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்டி.கணேசமூர்த்தி, புதுக்கோட்டைமாமன்னர் கல்லூரி முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் சா.விஸ்வநாதன், புழல் சிறைச்சாலையின் ஆசிரியர் கருப்புச்சட்டை ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர் இரா.கோபிநாத், கடலூர் மாவட்ட ஆசிரியர் ஆர்.ஆதிகேசவன் ஆகியோருக்கு ‘மாற்றத்தின் நாயகர்கள் விருது’ வழங்கப்பட்டது.

நிகழ்வை எழுத்தாளரும் ஆசிரியருமான சிகரம் சதீஷ்குமார் ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x