Published : 30 Aug 2020 11:52 AM
Last Updated : 30 Aug 2020 11:52 AM

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 30 சதவீதம் அதிகரிப்பு

கோப்புப் படம்

மதுரை

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தற்போது வரை மாணவர் சேர்க்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் 26 தொடக்கப் பள்ளிகள், 14 நடுநிலைப் பள்ளிகள், 9 உயர் நிலைப் பள்ளிகள், 15 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த வாரம்தான் மாணவர் சேர்க்கை தொடங்கியது.

பொதுவாக அதிக கட்டணம் வசூலிக்கப்படும் மெட்ரிக்குலே ஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி களில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கே பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வந்தது. இந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் பலர் வேலையிழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இலவச கல்வி தரும் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், இந்த ஆண்டு அரசு பள்ளி களில் மாணவர் சேர்க்கை அதி கரித்துள்ளது.

3,371 பேர் சேர்க்கை

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழ் வழிக் கல்வியில் 150 மாணவர்கள், 326 மாணவிகள் என மொத்தம் 476 பேர் சேர்ந்துள்ளனர். ஆங்கில வழிக் கல்வியில் 851 மாணவர்கள், 2044 மாணவிகள் என மொத்தம் 2895 பேர் சேர்ந்துள்ளனர். இந்த 2 பிரிவையும் சேர்த்து இதுவரை மொத்தம் 3,371 பேர் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை சராசரியாக 2,000 முதல் 2,500 பேர் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா கூறியதாவது: மாநகராட்சி பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதற்கு கரோனாவால் ஏற்பட்ட பாதிப்பால் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாமல், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ப்பது மட்டுமே காரணமில்லை. மெட்ரிக் பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளும் தற்போது மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ளன.

நவீன கழிப்பறை, குடிநீர் வசதி, நவீன விளையாட்டு மைதானம், பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்காக ஹைடெக் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், நீட் தேர்வு பயிற்சிக்கு தனி வகுப்புகள் உள்ளிட்ட பல வசதிகளை கடந்த ஓராண்டாக மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போது தனியார் பள்ளிகளைவிட மதுரை மாநகராட்சி பள்ளிகள் கட்டிட வசதியிலும், கல்வித் தரத்திலும் சிறப்பாக உள்ளது. இதுவும் மாணவர் சேர்க்கை அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும்.

மேலும், சமீப காலமாக தமிழ் வழிக் கல்வியை விட ஆங்கில வழிக் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது. மாணவர்களைவிட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x