Published : 25 Aug 2020 07:36 AM
Last Updated : 25 Aug 2020 07:36 AM

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கும் முன்பே 44 ஆயிரம் மாணவர்கள் விலகல்

சென்னை

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தாமல் ஏற்கெனவே 30 ஆயிரம் பேர் விலகிய நிலையில், தற்போது சுமார் 14 ஆயிரம்பேர் சான்றிதழை பதிவேற்றம் செய்யாமல் கலந்தாய்வில் இருந்து விலகியது தெரியவந்துள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 15-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால், அதில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 118 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி இருந்தனர். அதன்படி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 30,215 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தாமல், கலந்தாய்வில் இருந்து விலகினர்.

இதற்கிடையே, மாணவர்கள் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்ய கடந்த ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி (நேற்று) வரை அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சான்றிதழ் பதிவேற்றும் பணி நேற்று நிறைவடைந்தது. அதன்படி, சுமார் 1.14 லட்சம் மாணவர்களே தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய மாணவர்களில் சுமார் 14 ஆயிரம் பேர் சான்றிதழை பதிவேற்றம் செய்யாமலேயே கலந்தாய்வில் இருந்து விலகி உள்ளனர். இதனால், கலந்தாய்வு தொடங்கும் முன்பாகவே பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 44 ஆயிரம் மாணவர்கள் விலகியது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறியபோது, ‘‘பொறியியல் கலந்தாய்வுக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்ணை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஓரிருநாளில் வெளியிடுவார். பொறியியல் சேர்க்கை இணையதளம் மூலமாகவே சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்க உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x