Last Updated : 21 Aug, 2020 07:25 PM

 

Published : 21 Aug 2020 07:25 PM
Last Updated : 21 Aug 2020 07:25 PM

கரோனாவால் அரசுப் பள்ளிகளை நாடும் பெற்றோர்: தோரணம் கட்டி வரவேற்பு- அலைக்கழிக்காமல் சேர்க்க உத்தரவு

புதுச்சேரி

கரோனால் தனியார் பள்ளிகளில் பணம் கட்ட முடியாமல் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கப் பலரும் முன்வரத் தொடங்கியுள்ளனர். சான்றிதழை கேட்டு அலைக்கழிக்காமல் உடன் சேர்க்க கல்வித்துறையும் பள்ளிகளுக்கு தெரிவித்துள்ளது. பல பள்ளிகளில் தோரணம் கட்டி மாணவர்களை வரவேற்கின்றனர்.

ஆரம்ப வகுப்பு முதல் கல்லூரி வரை புதுச்சேரியில் கல்வி இலவசம். ஆனால் தனியார் பள்ளிகளின் மீதுள்ள ஆர்வத்தால் ஏழைகளும் நடுத்தர மக்களும் தனியார் பள்ளிகளில் சேர்த்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் படிப்புக்குச் செலவிட்டு வருகின்றனர். கரோனா அனைத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெற்றோர் நடப்பு ஆண்டு கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. இதனால் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து கல்வித் துறையானது 9-ம் வகுப்பு வரை தற்போது சான்றிதழ்களைக் கேட்டு அலைக்கழிக்காமல் வயதுக்கு ஏற்ப வகுப்பில் சேர்க்க அறிவுறுத்தி ஆணையும் பிறப்பித்துள்ளது. இதனால் அரசுப் பள்ளிகளில் எளிய முறையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்காக பள்ளி வளாகம் மற்றும் ஊர் எல்லைகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதில், ஆங்கில வழிக்கல்வி, தகுதியான ஆசிரியர்கள், கணினி வழிக்கல்வி, நூலக வசதி, ஸ்மார்ட் வகுப்பறைகள், முட்டையுடன் மதிய உணவு, இலவச பாடப்புத்தகம், சீருடை என அரசுப் பள்ளியின் சலுகைகள் ஏராளம் உள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர். இதனைச் சுட்டிக்காட்டித் தோரணம் கட்டி பல அரசுப் பள்ளிகள் வரவேற்கின்றன.

கிராமங்களில் மாணவர்கள் சேர்க்கையுடன், கரோனா விழிப்புணர்வு நோட்டீஸைத் தந்து ஓமியோபதி மருந்தையும் தருகின்றனர். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கி விட்டது.

மங்கலம் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் சீனு மோகன்தாஸ் கூறுகையில், ''அரசுப் பள்ளியில் மாணவர்களுக்குத் தரப்படும் வாய்ப்புகள், சலுகைகளைத் தெரிவிக்கிறோம். தற்போது நல்ல வரவேற்பு கிடைக்கிறது. கல்வித்துறை உத்தரவுப்படி சான்றிதழ் இல்லாவிட்டாலும் உடன் சேர்த்து கொள்கிறோம். பள்ளிகளில் உள்ள சிறப்பு அம்சங்களைத் தெரிவிக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

பெற்றோர் தரப்பில் கூறுகையில், ''தனியார் பள்ளியில் தற்போது கட்டணம் செலுத்த முடியவில்லை. மிகவும் கஷ்டமாக உள்ளதால் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளோம்" என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x