Published : 16 Aug 2020 06:59 AM
Last Updated : 16 Aug 2020 06:59 AM

உணவு, எரிசக்தி, சுகாதாரம், சுற்றுச்சூழல் என பல்வேறு துறைகளிலும் கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு அதிக வேலைவாய்ப்புகள்- ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தகவல்

சென்னை

உணவு, எரிசக்தி, சுகாதாரம், சுற்றுச்சூழல் என அனைத்து தொழில்களிலும் கெமிக்கல் இன்ஜினீயரிங் துறையின் பங்களிப்பு உள்ளதால், மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் நிபுணர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். உயர்கல்வி, வேலை வாய்ப்புகள் தொடர்பான மாணவர்கள், பெற்றோரின் கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கின்றனர். அந்த வகையில், கடந்த 13-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் எலெக்ட்ரோ கெமிக்கல், கெமிக்கல் இன்ஜினீயரிங் குறித்து நிபுணர்கள் பேசினர். அவர்கள் கூறியதாவது:

கோவை ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்மனிதவள இயக்குநர் டாக்டர் கவிதாசன்:

12-ம் வகுப்புக்குப் பிறகுதான் மாணவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது. மாணவர்கள் தங்களுக்கு இயல்பாகப் பிடிக்கும் பாடத்தைக் கண்டறிந்து அதில் சேர வேண்டும். விருப்பான பாடத்தை தேர்வுசெய்து படித்தால் வாழ்வில் ஜொலிக்கலாம். நாம் அனைவரும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு திறமையுடன்தான் பிறந்திருக்கிறோம். அந்த திறமையை அடையாளம் கண்டு, வளர்த்துக்கொண்டே வரவேண்டும். ஓய்வு நேரத்தில் ஏதேனும் புதிய விஷயம் கற்பதை வழக்கமாக வைத்திருங்கள். தோல்விகளைக் கண்டு ஒருபோதும் துவளக் கூடாது. தோல்விகளை சந்திக்காதவர்கள் யாருமே இல்லை. 10 ஆயிரம் தோல்விகளை சந்தித்த பிறகுதான் தாமஸ் ஆல்வா எடிசன்மின்சாரத்தை கண்டுபிடித்தார். வாழ்க்கையில் முன்னேற நல்லொழுக்கம் (Character), தைரியம் (Courage), திறமை (Competency), பொறுப்பு (Commitment), கற்பனை வளம் (Creativity) ஆகிய 5 ‘C’-க்கள் முக்கியமானவை. ‘இது என்னடா வாழ்க்கை’ என்று ஒருபோதும் நொந்து சொல்லாதீர்கள். ‘இது என் வாழ்க்கை’ என்று தன்னம்பிக்கையோடு சொல்லுங்கள். உயரம் என்றால் ‘Everest’. உயர வேண்டும் என்றால் ‘Never Rest’. எனவே, எதையும் தள்ளிப்போடாதீர்கள். இன்று செய்ய வேண்டியவற்றை இன்றே, இப்போதே செய்யுங்கள். வாழ்வில் வெற்றி உறுதி.

கோவை கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி கெமிக்கல் இன்ஜினீயரிங் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன்:

ரசாயன தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் சாதனங்களை வடிவமைத்து உருவாக்கி இயங்கச் செய்யும் இன்ஜினீயரிங் பிரிவுதான் கெமிக்கல் இன்ஜினீயரிங். உணவு, எரிசக்தி, சுகாதாரம், சுற்றுச்சூழல் என அனைத்து தொழில்களிலும் இத்துறையின் பங்களிப்பு உள்ளது. பெட்ரோலியம், பாலிமர் டெக்னாலஜி, அக்ரோ கெமிக்கல்ஸ், ஃபுட் புராசஸிங், ஃபார்மாசூட்டிகல்ஸ், நானோ சயின்ஸ், செமி-கண்டக்டர், எலெக்ட்ரானிக்ஸ், பயோ-மெடிக்கல் டெக்னாலஜி, சிமென்ட், கண்ணாடி, செராமிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எரிசக்தி, மாற்று எரிபொருள், மெட்டீரியல் சயின்ஸ், மெட்டலர்ஜி போன்ற பல்வேறு துறைகளிலும் கெமிக்கல் இன்ஜினீயர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

பிரான்ஸில் உள்ள அசிஸ்டம் இ அண்ட் ஐ நிறுவனத்தின் நியூக்ளியர் இன்ஜினீயர் (டிசைன் அண்ட் இன்னோவேஷன்) விக்னேஷ் எஸ்.கந்தசாமி:

கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் பி.இ., பி.டெக். ஆகிய இளநிலைப் படிப்புகள், எம்.இ., எம்.டெக்., எம்.எஸ். ஆகிய முதுநிலைப் படிப்புகள் உள்ளன. இளநிலையிலேயே பெட்ரோகெமிக்கல் என்று சிறப்பு நிலை படிப்பாக படித்தால் நமக்கான எதிர்கால வாய்ப்புகள் குறைவாக இருக்கும். அதனால், இளநிலையில் கெமிக்கல் இன்ஜினீயரிங் என்று பொதுவானதாக படிப்பது நல்லது. கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு எலெக்ட்ரோ பிளேட்டிங், ஹீட் ட்ரீட்மென்ட், ஹைட்ரோ ஜெனரேட்டட் ஆயில், சோப்பு உற்பத்தி, உரம் தயாரிப்பு, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் மிகுதி. சூரிய மின்சாரம், காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி, மெட்டீரியல் சயின்ஸ், பேட்டரி போன்ற எனர்ஜி ஸ்டோரேஜ், திடக்கழிவு மேலாண்மை போன்றவை எதிர்காலத்தில் ஜொலிக்கக்கூடிய துறைகள். சேஃப்டி இன்ஜினீயர், புரடக்‌ஷன், என்விரான்மென்டல், டிசைன், மெயின்டனன்ஸ், ஆர் அண்ட் டி ஆகிய பிரிவுகளில் இன்ஜினீயராக கெமிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் பணிக்கு சேரலாம். பட்டப் படிப்பு படிக்கும் காலத்திலேயே நெட்வொர்க்கிங், பேச்சு, எழுத்து ஆகிய மென்திறன்களை வளர்த்துக்கொண்டால் பின்னாளில் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

காரைக்குடி ‘சிக்ரி’ பி.டெக். ஸ்டடீஸ் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மற்றும் டீன் டாக்டர் பி.ரமேஷ் பாபு:

‘சிக்ரி’ எனப்படும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Electro Chemical Research Institute - CECRI) காரைக்குடியில் உள்ளது. இது சிஎஸ்ஐஆர் அமைப்பின் கீழ் இயங்கும் ஓர் ஆய்வு நிறுவனம். இங்கு பி.டெக். (கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினீயரிங்) படிப்பு வழங்கப்படுகிறது. இதுபோன்ற படிப்பு ஆசியாவிலேயே இங்கு மட்டும்தான் உள்ளது. இதில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன. இதில் 5 இடங்கள் வெளி மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு நடத்தும் பொறியியல் பொது கலந்தாய்வு அடிப்படையில் இங்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். வெளி மாநில மாணவர்களுக்கான சேர்க்கை ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.

பொதுவாக பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பாடம் எடுப்பார்கள். ‘சிக்ரி’யை பொருத்தவரை, இங்கு பணியாற்றும் விஞ்ஞானிகள்தான் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பார்கள். இது ‘சிக்ரி’யின் மற்றொரு சிறப்பம்சம். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவது, இங்குள்ள ஆய்வகங்களில் ஆய்வுப் பணி போன்றவை சிக்ரி மாணவர்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்புகள். பிஎச்.டி. படிப்புடன் இணைந்த எம்.டெக். படிப்பு சிக்ரியில் விரைவில் அறிமுகம்செய்யப்பட உள்ளது. இதற்கு ‘கேட்’ நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 5 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிறைவாக, எலெக்ட்ரோ கெமிக்கல், கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகள், அத்துறைக்கான வேலைவாய்ப்புகள் குறித்து மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை துணை ஆசிரியர்ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியைஇந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிஅண்ட் சயின்ஸ் இணைந்து நடத்தியது. இதில்பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/3gXObXA என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்.

இன்று காலை, மாலை 2 நிகழ்ச்சிகள்

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சி இன்று 2 நிகழ்வுகளாக நடக்கிறது. காலை 11 மணி நிகழ்வில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சேர்க்கை தொடர்பான தகவல்களை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் என்.குமார், முதல்வர் டாக்டர் எம்.கல்யாணசுந்தரம், சென்னை சுங்கத் துறை முன்னாள் ஆணையர் பி.முத்துச்சாமி ஐஆர்எஸ் பகிர்ந்துகொள்கின்றனர். பேராசிரியர் டாக்டர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தன்னம்பிக்கை உரை நிகழ்த்துகிறார். மாலை 4.30 மணி நிகழ்வில் சென்னை மாவட்ட நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் என்.ரமேஷ், சென்னை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், ஸ்கூல் ஆஃப் லா, விசிட்டிங் புரஃபசர் சி.ராபின் ஆகியோர் சட்டப் படிப்புகள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டணம் இல்லை. மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். பங்கேற்க விரும்புபவர்கள் http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x