Published : 15 Aug 2020 12:16 pm

Updated : 15 Aug 2020 12:16 pm

 

Published : 15 Aug 2020 12:16 PM
Last Updated : 15 Aug 2020 12:16 PM

ரூ.1.50 லட்சம்: நண்பர்களிடம் நிதி திரட்டி ஏழைக் குடும்பங்களுக்கு உதவிய 11-ம் வகுப்பு மாணவன் பிரணவ்

rs-1-50-lakh-pranav-an-11th-class-student-helped-poor-families-by-raising-funds-from-friends

நாகப்பட்டினம்

கரோனா பொது முடக்கத்தால் துன்பப்படும் வறியவர்களின் கண்ணீரைத் துடைக்க சக மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் நிதி சேர்த்து நாகப்பட்டினம் பகுதி மக்களுக்கு நேரில் வந்து உதவியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கே.பிரணவ்.

சென்னையில் உள்ள என்.பி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் பிரணவ், கரோனா காலத்தில் சிரமப்படும் ஏழைக் குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக ‘கிஃப்ட் ஹோப்’ என்று ஒரு அமைப்பைத் தொடங்கினார். அதன் மூலம் தனது பள்ளித் தோழர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என பலரிடமும் பேசி தனது எண்ணத்தைச் சொல்லி நிதியுதவி கோரினார். அவர்களும் தாராளம் காட்ட, ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி சேர்ந்தது.


இந்தத் தொகையைக் கொண்டு ஏழைக் குழந்தைகளின் குடும்பங்களுக்கு எப்படி உதவலாம் என யோசித்துக் கொண்டிருந்த பிரணவுக்கு, ‘கம்யூனிட்டி ட்ரீ ’ என்ற தன்னார்வ அமைப்பின் ஹபீஸ்கான் உதவிக்கு வந்தார். அவர் மூலம் நாகை ஆட்சியர் பிரவீன் பி நாயரைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவரும் பிரணவின் இந்த கருணைத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான உதவிகளைச் செய்துகொடுக்கச் சம்மதித்திருக்கிறார். இதையடுத்து, ஆதியன் இன மக்களுக்காக ‘வானவில்’ என்ற அமைப்பை நிறுவி செயல்பட்டுக் கொண்டி ருக்கும் ரேவதி மூலமாகப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

செனையிலிருந்து தனது தந்தையுடன் நாகப்பட்டினம் வந்து சேர்ந்தார் பிரணவ். இதனையடுத்து முதல்கட்டமாக நேற்று நாகப்பட்டினம் அருகேயுள்ள செல்லூரில் ஏழைக் குழந்தைகளின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டன. இங்குள்ள 65 ஆதியன் குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரவீன் பி நாயர் மற்றும் கூடுதல் ஆட்சியர் பிரஷாந்த் ஆகியோருடன் இணைந்து பிரணவ், அவரது தந்தை கிருஷ்ணா ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 1000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து நீலப்பாடி, பொறக்குடி, அரசூர் ஆகிய ஊர்களில் வசிக்கும் 250 ஆதியன் குடும்பங்களுக்கும், வாஞ்சூரில் வசிக்கும் 15 நரிக்குறவர் குடும்பங்களுக்கும், ஐவநல்லூரைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 15 பேருக்குமாக மொத்தம் 285 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ‘கம்யூனிட்டி ட்ரீ’ அமைப்பின் ஹபீஸ்கான், ‘வானவில்’ இயக்குநர் ரேவதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக நாகை அருகேயுள்ள நான்கு கிராமங்களில் வசிக்கும் 215 குடும்பங்களுக்கு ‘வானவில்’ ரேவதி மூலம் இன்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.மாணவர் பிரணவிடம் இதுகுறித்து பேசினேன்.

“ இந்த கஷ்ட காலத்துல வசதிபடைச்சவங்க வீட்ல சவுகரியமா இருப்பாங்க. கூலி வேலைக்குப் போய் சாப்பிடுறவங்க என்ன செய்வாங்க? இந்தக் கேள்விதான் ஏழைக் குடும்பங்களுக்கு ஏதாச்சும் உதவிடலாமே என்ற எண்ணத்தை எனக்குள்ள விதைச்சுது. அதுக்காக, நான் சேமிப்பில் வெச்சிருந்த 5000 ரூபாயுடன் இன்னும் சில நண்பர்களிடம் உதவி கேட்டேன். குறைந்தபட்சம் 100 ரூபாயாச்சும் குடுங்க; அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம்னு நண்பர்கள்கிட்ட சொன்னேன். மளமளன்னு உதவிக்கரம் நீண்டது.

ஜூன் 8-ம் தேதி ஆரம்பிச்சு ஜூலை 15-ம் தேதி வரைக்கும் நிதி திரட்ட டைம் வெச்சுக்கிட்டோம். அதுக்குள்ள ஒன்றரை லட்ச ரூபாய் சேர்ந்திருச்சு. அதை அப்படியே ஹபீஸ் சார் மூலமா நாகப்பட்டினம் கலெக்டருக்கு அனுப்பி வைச்சோம். அவங்க வழிகாட்டுதலின்படி ஏழை மக்களுக்கு உதவியது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதோட உதவி முடிஞ்சுடாது. என்னோட வேலைகள் இனிமேலும் தொடரும்” என்றார் பிரணவ்.

கரோனா கஷ்டத்தில் இருக்கும் சாமானிய மக்களின் கண்ணீரைத் துடைக்க இப்படி இன்னும் பல பிரணவ்கள் முன்களத்துக்கு வரட்டும்.

தவறவிடாதீர்!


பிரணவ்11-ம் வகுப்பு மாணவன்நிதி திரட்டல்கரோனாகொரோனாநாகப்பட்டினம்நரிக்குறவர்வானவில்’ ரேவதிPranavPoor families

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author