Published : 04 Aug 2020 07:53 am

Updated : 04 Aug 2020 07:53 am

 

Published : 04 Aug 2020 07:53 AM
Last Updated : 04 Aug 2020 07:53 AM

ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் பிளஸ் 2 படித்தால் போதும்.. பைலட் ஆகலாம்: ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை நிபுணர்கள் தகவல்

uyarvukku-uyarkalvi
பி.ராம் ரன்வீர்

சென்னை

ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அமிர்தா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுநர்கள் உரையாற்றி வருகின்றனர். கடந்த 2-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் குறித்து துறை வல்லுநர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:


ராணுவ விஞ்ஞானியும், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (என்டிஆர்எஃப்) இயக்குநருமான டாக்டர் வி.டில்லிபாபு: பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் மேற்படிப்பை தேர்வுசெய்வதற்கு முன்பு, தங்களது லட்சியம் எது என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். பொறியியல் படிப்பை பொருத்தவரை, அடிப்படை பொறியியல் பிரிவு (Core Subject), சிறப்பு பிரிவு (Specialization) என இரு பிரிவுகள் உண்டு. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிகல்ஸ் போன்றவை அடிப்படை பொறியியல் பிரிவுகள். ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் உள்ளிட்டவை சிறப்பு பொறியியல் பிரிவுகளின் கீழ் வருகின்றன.

வான்வெளியில் பறக்கக்கூடிய விமானம், ஹெலிகாப்டர், ட்ரோன் போன்ற சாதனங்கள் தொடர்பான படிப்பு ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங். இந்த சாதனங்கள் மட்டுமின்றி செயற்கைக் கோள், ஏவுகணை உள்ளிட்ட விண்வெளியில் பறக்கக்கூடிய சாதனங்களையும் சேர்த்து படிப்பது ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங்.

ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் தொடர்பான நிறுவனங்களில் இந்த பாடப்பிரிவுகளைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் மட்டுமின்றி சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெட்டீரியல் சயின்ஸ், மெட்டலர்ஜி இன்ஜினீயரிங், டிசைனிங் (பி.டிசைன்) என 40 விதமான பொறியியல் பிரிவினருக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. விமானப் படை, ராணுவம், கடற்படை, இஸ்ரோ, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் (ஹெச்.சி.எல்), சிஎஸ்ஐஆர் ஆய்வகம் போன்றவற்றிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் வேலையில் சேரலாம்.

இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஸ்கூல் ஆஃப் ஏரோநாட்டிகல் சயின்ஸ் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஆர்.அசோகன்: விவசாயம் தொடங்கி பாதுகாப்பு துறை வரை அனைத்து துறைகளிலும் ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங்கின் பயன்பாடுகள் நிறைந்துள்ளன. ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொறியியல் கல்வி நிறுவனங்களில் பி.டெக். ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மற்ற பொறியியல் படிப்புகளுக்கு ஏஐசிடிஇ வரையறுத்துள்ள கல்வித் தகுதிதான் இந்த படிப்புகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பி.எஸ்சி. இயற்பியல் பட்டதாரிகள் ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் பி.டெக். படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம்.

பி.டெக். தவிர, பி.எஸ்சி. (ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ், ஏவியானிக்ஸ்), பிபிஏ (ஃபிளைட் க்ரூ அண்ட் கிரவுண்டு க்ரூ), ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினீயரிங் (ஏஎம்இ) உள்ளிட்ட 3 ஆண்டுகால படிப்புகளிலும் மாணவர்கள் சேரலாம். கல்லூரியை தேர்வு செய்யும்போது, அங்கு அனுபவம் வாய்ந்த, தரமான பேராசிரியர்கள் இருக்கிறார்களா, ஆய்வக வசதிகள் உள்ளனவா என்பது போன்ற அம்சங்களை கருத்தில் கொள்வது அவசியம்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் ஃபர்ஸ்ட் ஆபீஸர் கேப்டன் பி.ராம் ரன்வீர்: இளம்வயதில் பலருக்கும் பைலட் (விமானி) ஆகவேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், அந்த கனவை எப்படி அடைவது என்ற வழிமுறைகள் தெரியாது. பைலட் ஆவதற்கு பிளஸ் 2 கல்வித் தகுதி போதும். அதில் 50 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். நல்ல உடல்தகுதி, கிளாஸ்-1 எனப்படும் உயர் மருத்துவ தகுதி அவசியம். அதில் கண்பார்வை, நுண்ணறிவுத் திறன், இசிஜி, ரத்த அழுத்தம், இதய செயல்பாடு என பல்வேறு சோதனைகள் இடம்பெறும். கண்ணாடி அணிந்தவர்களும் தகுதியுடையவர்கள்தான். ஆனால், அவர்களது பார்வை குறைபாடு, சரிசெய்யக்கூடிய அளவில் இருக்க வேண்டும். பைலட் ஆவதற்கு கமர்ஷியல் பைலட்லைசென்ஸ் (சிபிஎல்) பெற வேண்டும். இதை இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வழங்குகிறது. இதற்கு முதல்கட்டமாக ஜெனரல் டெக்னிக்கல், ஏர் நேவிகேஷன், ஏர் வெதர், ஏர் ரெகுலேஷன், ஏர்கிராஃப்ட் டெக்னிக்கல் ஆகிய 5 பாடங்களில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பிறகு, விமானி பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, விமானத்தில் 200 மணி நேரம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அதை முடித்த பிறகு, ரேடியோ டெலிபோனி எக்ஸாம் (ஆர்டிஇ) தேர்வில் வெற்றிபெற வேண்டும். இதை முடித்தவர்களுக்கு கமர்ஷியல் பைலட் லைசன்ஸ் வழங்கப்படும். அதன் பிறகு, எந்த வகை விமானத்தை ஓட்ட இருக்கிறோமோ, அதை ஓட்டுவதற்கு பயிற்சி பெற்று, டைப் ரேட்டிங் (Type Rating) தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். அதன் பின்னரே விமானி ஆகலாம். விமானம் ஓட்டும் பயிற்சிக்கு சுமார் ரூ.35 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையும், பிறகு டைப் ரேட்டிங் தகுதிச் சான்றுக்கான பயிற்சி பெற ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையும் செலவாகும். இது அதிகம்போல தோன்றினாலும், பயிற்சி முடிந்து ஜூனியர் பைலட் ஆபீஸராக பணியில் சேரும்போதே ரூ.1.5 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். கேப்டன் பதவியை அடையும்போது ரூ.6 லட்சம் பெறலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் படிப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்த மாணவர்கள், பெற்றோரின் கேள்விகளுக்கு துறை வல்லுநர்கள் பதில் அளித்தனர். இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் இணைந்து நடத்தியது. இதில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/33pPqum என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் காணலாம்.

இணையத்தில் காண வாய்ப்பு

‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி கடந்த ஜூலை 24-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறை வல்லுநர்கள் பங்கேற்று, அத்துறை தொடர்பான படிப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து உரையாற்றுகின்றனர். இதுவரை நடந்த நிகழ்வுகளில் பங்கேற்கத் தவறியவர்கள் கீழ்க்கண்ட இணையதள முகவரிகளில் முழு நிகழ்வுகளையும் காணலாம்.

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல்: https://bit.ly/3gn76ui

செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ், ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன்: https://bit.ly/2PgDCm3

எம்பெடட் சிஸ்டம், இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐஓடி) சைபர் செக்யூரிட்டி: https://bit.ly/315q56m

சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர்: https://bit.ly/39RYY2O

கலை, அறிவியல் படிப்புகள்: https://bit.ly/3fn1AGK

மரைன் இன்ஜினீயரிங், ஓஷன் டெக்னாலஜி: https://bit.ly/2D2R5vv

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். பங்கேற்க விரும்புபவர்கள் http://connect.hindutamil.in/uuk.php என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.


ஏரோநாட்டிகல் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங்ஏராளமான வேலைவாய்ப்புகள்பிளஸ் 2 படித்தால் போதும்பைலட் ஆகலாம்உயர்வுக்கு உயர்கல்விதுறை நிபுணர்கள் தகவல்Uyarvukku uyarkalvi

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author