Published : 31 Jul 2020 06:37 PM
Last Updated : 31 Jul 2020 06:37 PM

யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 31) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020-21 ஆம் ஆண்டுக்குடிற்கு பி.என்.ஒய்.எஸ். (BNYS) மருத்துவப் பட்டப்படிப்பில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் முதன் நேர்வில் அறிவியல் பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

விருப்பப் படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பினை ஆக.03 முதல் ஆக.28 முடிய மாலை 5 மணி வரை மட்டும் எங்களது அலுவலக வலைதளமான www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்கள் இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது தேர்வுக்குழு அலுவலகத்திலிருந்தோ அல்லது கல்லூரிகளிலிருந்தோ வழங்கப்பட மாட்டாது.

விண்ணப்பக் கட்டணம்

விருப்பப் படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவம்: ரூ.500

சிறப்புப் பிரிவு விண்ணப்பம்: ரூ.100 (ஒவ்வொரு சிறப்புப் பிரிவுக்கும்)

பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப் படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவத்தைத் தபால்/ கூரியர் சேவையின் மூலமாகவோ, நேரிலோ சமர்ப்பிக்கும்போது விண்ணப்பக் கட்டணமான ரூ.500-ஐ நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 03-08-2020 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பெறப்பட்ட கோடிட்ட கேட்பு வரைவோலையை (DemandDraft) இணைத்து அனுப்ப வேண்டும். அக்கேட்பு வரைவோலை சென்னையில் பணமாக்கக்கூடியதாகவும், 'இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை 106' (Director of Indian Medicine and Homoeopathy, Chennai-106) என்ற பெயரிலும் இருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டியல் இனம் / பட்டியல் இனம் (அருந்ததியினர்) / பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் மேற்படி விருப்பப்படிவத்துடன் கூடிய விண்ணப்பப் படிவத்திற்கான தொகை ரூ.500-ஐ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

சிறப்புப் பிரிவினர்

1. முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், 2. விளையாட்டு வீரர்கள், 3. மாற்றுத்திறனுடையோர் 4. யூனியன் பிரதேசம்/ பி.என்.ஒய்.எஸ். கற்பிக்கும் கல்லூரிகள் இல்லாத மாநில மாணவர்கள் ஆகிய சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மேற்கூறிய பூர்த்தி செய்யப்பட்ட விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்ப படிவத்துடன் சிறப்புப் பிரிவுக்கான சிறப்புப் பிரிவு படிவத்தினைப் பூர்த்தி செய்து 'இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை- 106' என்ற பெயரில் ஆக.8 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ எடுக்கப்பட்ட ரூ.100-க்கான சென்னையில் பணமாக்கக்கூடிய கோடிட்ட கேட்பு வரைவோலை (ரூபாய் நூறு மட்டும்) எடுத்து ஒவ்வொரு சிறப்புப் பிரிவுக்கும் தனித்தனியாக, அதிகபட்சம் மூன்றுக்கு மிகாமல் மட்டும் இணைத்து ஒரே உறையில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் அவர்கள் தகவல் தொகுப்பேட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு சான்றிதழ்களைப் பெற்று அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் குடும்பத்தில் அவரது உடன்பிறந்தோர் இந்தச் சலுகையைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது.

விருப்பப் படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள். ஆக.28, மாலை 5 மணி வரை .

நிறைவு செய்யப்பட்ட விருப்பப் படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பத்தோடு கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களையும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு ஆக.31 மாலை 5.30 மணிக்குள் தபால் அல்லது கூரியர் மூலமாக வந்து சேரவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கவோ வேண்டும். அஞ்சல் துறையினரால் மற்றும் கூரியர் நிறுவனத்தால் ஏற்படும் காலத்தாமதம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

முகவரி:

செயலாளர், தேர்வுக்குழு,

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம்,

அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம்,

அரும்பாக்கம், சென்னை- 600 106.

அஞ்சல்துறை மற்றும் கூரியர் நிறுவனத்தில் கடைசி நாளுக்கு முன் தேதியில் பதிவு செய்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் வந்து சேரும் விண்ணப்பங்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இதுகுறித்து எவ்வித கடிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப்பட மாட்டாது.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பப் படிவங்களை கீழ்க்கண்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கட்டணத் தொகையினை பத்தி 3-ல் குறிப்பிட்டுள்ளவாறு பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.

இணையதள முகவரி: http/www.tnhealth.tn.gov.in".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x