Published : 15 Jul 2020 11:41 am

Updated : 15 Jul 2020 12:19 pm

 

Published : 15 Jul 2020 11:41 AM
Last Updated : 15 Jul 2020 12:19 PM

குழந்தைகளை மன்னிப்பு கேட்கச் சொல்லாதீங்க!- மூத்த மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடல்

a-conversation-with-brindha-jayaraman

துள்ளித் திரியும் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் இளையோருக்கும் இது சவால் மிகுந்த காலகட்டம். அவர்களை விடவும் இந்தச் சவாலைச் சமாளிக்க நிர்பந்திக்கப்பட்டு இருப்பவர்கள் பெற்றோர். ஏனெனில் மூன்று மாதங்களுக்கும் மேலாக பணிச்சுமை, பணச்சுமையோடு சேர்ந்து 24 மணிநேரமும் சிறாரை வீட்டில் பராமரிப்பது என்பது சாமானிய காரியமல்ல.

குழந்தைகளை மாணவர்களாக அணுகும் கல்வித் துறை இந்த இக்கட்டான காலகட்டத்திலும் எப்படியாவது கல்வியை வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் நடவடிக்கையில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளாகக் கல்வி நிலையத்துக்குச் சென்று படிக்கப் பழக்கப்பட்ட குழந்தைகளுக்கோ வீட்டில் இருந்து படிப்பது என்பது புரியாத புதிராக உள்ளது. இந்தப் புதிய சகஜநிலைக்கு தங்களைத் தகவமைத்துக் கொள்ள அவர்கள் தடுமாறுகிறார்கள். இந்நிலையில் குழந்தைகளின் கல்வி, குழந்தைமை, குடும்பச் சூழல் அனைத்தையும் சமநிலையில் வைத்துக்கொள்ளப் பெற்றோருக்கு உளவியல் வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகிறது.


இதுகுறித்து மூத்த மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடினோம்.

வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொடுங்கள்!

"இரண்டாம் உலகப் போர் காலத்தில் போர் முடிந்து வீடு திரும்பிய வீரர்களும் அவர்தம் குடும்பத்தினரும் எதிர்பாராத உளவியல் சிக்கல்களுக்கு ஆளானார்கள். அதன் பின்னரே மனநலத் துறையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. அப்படியான சூழ்நிலைக்குக் கரோனா நோய்த் தொற்று காலமும் நம்மைத் தள்ளியுள்ளது. நடுத்தர வர்க்க மக்களைப் பொறுத்தவரை ஊரடங்கு என்பது குடும்பத்துடன் நல்லபடியாக நேரம் செலவழிப்பதற்கான அவகாசமாக ஆரம்பத்தில் பார்க்கப்பட்டது. இத்தனை காலம் வீட்டுக்கும் அலுவலகத்துக்குமாக ஓடிக்கொண்டிருந்தவர்கள் இணையர், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வீட்டில் செலவழித்தார்கள். ஆனால், நாளடைவில் குடும்பப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதில் தொடங்கி கணவன் மனைவிக்கு இடையிலான சண்டை சச்சரவு, பெற்றோருக்கும் பதின்பருவக் குழந்தைகளுக்கும் இடையிலான முரண், இளவயதினரின் ஆற்றலுக்கும் மூளைக்கும் தீனிபோடுவதில் திணறல் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

இப்போதுதான் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு யோசித்துள்ளது. அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் வீட்டுக்கு வீடு மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். இது பல அடுக்குகளில் அணுக வேண்டிய சவாலாகும். இந்நிலையில் சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரை பெற்றோர் எப்படி இந்த இக்கட்டான காலகட்டத்தில் வளர்க்கலாம் என்பதை மட்டுமே இப்போது சொல்கிறேன்.

தங்களுடைய அன்றாடம் எப்படியாக கரோனா காலத்தில் மாறி இருக்கிறது என்பதைக் குழந்தைகளோடு பெற்றோர் உரையாடத் தொடங்க வேண்டும். வீட்டிலேயே இருப்பதனால் தன்னுடைய நேரம் முழுவதையும் குடும்பத்துக்காகச் செலவிட முடியாது என்று வீட்டில் இருந்து அலுவலகப் பணிகளைச் செய்துவரும் பெற்றோர் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லலாம். அதைக் குழந்தைகளும் ஏற்றுக்கொண்டு தகுந்தார்போல நடந்துகொள்ளக் காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுபோன்றதொரு புதிய வழக்கத்தை ஏற்படுத்தலாம்.

எப்போதுமே சில்வண்டு போலச் சுறுசுறுப்பாக இருக்கும் சிறுவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கச் சின்ன சின்ன அறிவுசார் விளையாட்டுகள் தாருங்கள். உதாரணத்துக்கு, பூகோள உருண்டை பொம்மை வீட்டில் இருந்தால் அல்லது உலக வரைபடம் இருந்தால் அதைப் பார்த்து நாடுகளின் தலைநகரைக் கண்டுபிடித்து விளையாடச் சொல்லலாம். பிறகு அதனடிப்படையில் வினாடி வினா நடத்தலாம். சரியான பதிலுக்குப் பரிசுகள் தரலாம். ஆனால் ஒரு போதும் ரொக்கப் பரிசு தராதீர்கள். குழந்தைக்குப் பிடித்தமான உணவு பண்டத்தைத் தருவதாகப் பரிசு இருக்கலாம். உணவைப் பரிமாறும்போது வினாடி வினாவுக்கான பரிசு இது எனச் சொல்லி, கைதட்டி அவர்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுங்கள்.

பொழுதுபோக்காக ஓவியம் வரைதல், வண்ணங்கள் தீட்டுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கலாம். அதேநேரம் 'ஆரஞ்சு பழத்துக்கு ஏன் நீல நிறம் பூசினாய்' என்பது போன்ற கேள்விகளை எழுப்பி குழந்தையின் மனவோட்டத்துக்குக் கடிவாளம் போடாதீர்கள். குழந்தைகளுக்குப் பிடித்தமானது மருத்துவர் அல்லது ஆசிரியர் போல நடிப்பதாகும். இதைச் செய்யக் காகிதம், குழந்தைகளுக்கு உகந்த கத்தரிக்கோல் கொடுத்து ‘டாக்டர் கோட்’ செய்து அதை அணிந்தபடி விளையாட ஆலோசனை தரலாம். ரொட்டி மாவு பிசையும்போது ஒரு உருண்டை கொடுத்து அதைக் கொண்டு விலங்குகள், மலர்கள் செய்து விளையாட அனுமதியுங்கள். இது குழந்தையின் தொடு உணர்வை ஊக்குவிக்கும். இன்னும் வார்த்தை விளையாட்டு உள்ளிட்ட பல இருக்கவே செய்கின்றது.

வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வதில் இளம் வயதினரையும் தாராளமாக ஈடுபடுத்தலாம். அவர்களுக்குப் பிடித்தமான இசையை ஒலிக்கவிட்டு அதற்கு ஏற்ற நடன அசைவுகளோடு வீட்டைச் சுத்தம் செய்யச் சொல்லலாம். இரவு உறங்கச் செல்லும் முன் கதை சொல்லி அல்லது சின்ன விளையாட்டு ஆடலாம். இப்படி படிப்பு, உணவு, விளையாட்டு, தூக்கம் ஆகியவற்றை இறுக்கமற்ற ஒழுங்குக்குள் கொண்டுவந்தால் மீண்டும் பள்ளிக்குச் செல்லும்போது அன்றாடத்துக்குச் சுலபமாக வந்துவிடுவார்கள்.

பதின்பருவத்தினரும் முன்பதின் வயதினரையும் வேறு விதமாக அணுக வேண்டி வரும். சொல் பேச்சுக் கேளாமை என்பது இந்த வயதினருக்கு உரித்தான சுபாவம். இந்தக் குழந்தைகளின் பெற்றோர் நிதானமாக இருத்தல் அவசியம். உங்களுக்கு இருக்கும் வீட்டு வேலை, அலுவலக வேலை, இணையருடனான மனக்கசப்பு அல்லது எந்த விதமான மன அழுத்தம் இருந்தாலும் அவற்றை மனத்தில் தனித்தனி அறைகளில் வைத்துக்கொள்ளப் பழகுங்கள். எல்லாவற்றையும் சேர்த்துச் சொல் பேச்சுக் கேளாத பதின்பருவப் பிள்ளையிடம் காட்டினால் உறவில் பழுதுபார்க்க முடியாத விரிசல் ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த வயதுக் குழந்தைகளைக் கையாள பொறுமை அவசியம். பதைபதைப்பு ஏற்படும்போது அதை வெளிக்காட்டாமல் சீராக மூச்சுப் பயிற்சி செய்யுங்கள், ஒரு மடக்கு தண்ணீர் குடியுங்கள். அதன் பிறகு உரையாடுங்கள். 'இப்ப படிக்கலைனா பிறகு ரொம்ப கஷ்டப்படுவே' என்றெல்லாம் சொல்வதில் பயனில்லை. ஏனெனில் உடனடி விளைவுகள் மட்டுமே உரைக்கக்கூடிய வயது அது.

குடும்ப சந்திப்பு நேரம் என்பதை தினமும் நடத்துங்கள். அதில் குழந்தைகள் அன்றாடம் செய்ய வேண்டிய கடமைகளை வகுத்துச் சொல்லுங்கள். வீட்டு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கும்போது துணி துவைப்பது ஒரு குழந்தையின் பொறுப்பு என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேளை இதை இன்று அவர் செய்யத் தவறினால் நாளை இரண்டுநாள் அழுக்குத் துணிகளை சேர்த்துத் துவைக்க வேண்டி வரும் என்பதைப் புரியவையுங்கள். கண்டிப்புடன் அல்லாமல் தெளிவான, நிதானமான, பிரியமான குரலில் எடுத்துச் சொல்லுங்கள்.

சிறுவயதினர் போலன்றி உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புக் குழந்தைகள் இந்தக் காலகட்டத்தில் வீட்டில் இருந்தபடியே படிப்பது என்பது சோர்வை ஏற்படுத்தக்கூடியது. தங்களுடைய சக வயதினருடன் பேசி, பழகி ஊக்கம் பெற்று கல்வி கற்கும் பருவம் இது. அப்படி இருக்க ஆன்லைன் வகுப்புகள் அல்லது தொலைக்காட்சி வகுப்புகளில் வீட்டில் இருந்தபடியே இவர்கள் கலந்து கொள்ளும்போது சிலவற்றைக் கடைப்பிடிப்பது பயன் தரும். குளித்து, சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வகுப்பில் கலந்துகொள்ளப் பழக்குங்கள். இதன் மூலம் இது விடுமுறை அல்ல வீட்டுப்பள்ளி காலம் என்பதை உணர்வார்கள். படிப்பு நேரம் போக, 'கரோனா காலத்தில் கற்றுக்கொண்டவை', 'கரோனாவுக்கு முன்னால் உலகம் எதிர்கொண்ட பெருந்தொற்றுகள் ஓர் ஆய்வு' போன்ற கூடுதல் திட்டங்களைத் தயாரித்து சக மாணவர்களுடன் பகிர்ந்து உரையாடச் சொல்லலாம்.

பொழுதுபோக்காக இசை, நடனம் ஆகியவற்றை ஊக்குவியுங்கள். அதுவே மிகச் சிறந்த மனநல மருந்து. அவரவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் இசைத்து, பாடி, ஆடி கலவையாக நிகழ்ச்சிகளைத் தயாரிக்கலாம். அவர்களுக்குப் பிடித்தமான கவின் கலைகள், நிகழ்த்துக்கலைகளில் ஈடுபட அனுமதியுங்கள். அவ்வப்போது தனிமையில் அவர்களுடைய நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் அனுமதியுங்கள். வெளியே செல்லத் துடிக்கும் இந்த வயதினருக்கு நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும், நம்மிடம் இருந்து பிறரைக் காப்பாற்றவும் இந்த சுயகட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குங்கள்.

உங்களுடன் அரட்டை அடிப்பதில் விருப்பம் காட்டும் குழந்தைகளிடம் உங்களுடைய சிறுபிராயத்துச் சேட்டைகளையும் அதன் விளைவுகளையும் சொல்லலாம். ஆனால் ஒருபோதும் அறிவுரை போலச் சொல்லக்கூடாது. அதைவிட முக்கியம் உங்கள் குழந்தை தவறு செய்துவிடும் பட்சத்தில் மன்னிப்பு கேட்கும்படி ஒருபோதும் சொல்லாதீர்கள். தான் செய்தது தவறு என்பதை உணர்ந்தார்களா என்று மட்டும் கேளுங்கள். இந்த காலத்தில் குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்குத் தேவையான விரிவான வழிகாட்டுதலை சென்னை கவுன்சிலர்ஸ் பவுண்டேஷன் தயாரித்து இருக்கிறது. 'கோவிட் 19 நிலவும் இச்சூழலில் பெற்றோருக்கு உதவும் நோக்கில் வெளியிடப்பட்ட சிறு கையேடு' என்ற தலைப்பில் 20 பக்கங்கள் கொண்ட கையேட்டை இணையத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கிப் படித்துப் பயன்பெறலாம்".

இவ்வாறு மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் கூறினார்.

இணையதள முகவரி : https://www.chennaicounselorsglobal.org/images/TalkingwithChildren_Tamil.pdf

தவறவிடாதீர்!


Ar rahmanபிருந்தா ஜெயராமன்குழந்தைகள்குழந்தை வளர்ப்புகுழந்தைகள் மனநலம்மனநல ஆலோசகர் பிருந்தாபிருந்தா ஜெயராமனுடன் உரையாடல்Vetri kodi

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author