Published : 11 Jun 2020 07:15 am

Updated : 11 Jun 2020 07:15 am

 

Published : 11 Jun 2020 07:15 AM
Last Updated : 11 Jun 2020 07:15 AM

‘இந்து தமிழ் திசை’, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ அதிக வேலைவாய்ப்பு வழங்கும் ஹோட்டல் மேலாண்மை கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் 2-வது அமர்வில் வல்லுநர்கள் தகவல்

hoyel-management

சென்னை

படித்து முடித்ததும் இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் படிப்பாக ஹோட்டல் மேலாண்மை கல்வி உள்ளது என்று துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு ஆன்லைன் நிகழ்ச்சிகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தி வருகிறது. அந்த வகையில், பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் வழிகாட்டி நிகழ்ச்சியை ஆன்லைனில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. அதன் 2-வது அமர்வாக, எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் உடன் இணைந்து, ‘உயர்வுக்கு ஹோட்டல் மேலாண்மை கல்வி’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற வல்லுநர்கள் கூறியதாவது:

தி ரெசிடென்ஸி ஹோட்டல்ஸ் முதன்மை செயல் அதிகாரி பி.கோபிநாத்: தொடக்கத்தில் ஹோட்டல் மேலாண்மை கல்வியின் முக்கியத்துவம் பற்றி பலரும் அறியாமல் இருந்தனர். தற்போது இந்த நிலை மாறிவிட்டது. இன்று இத்தொழிலில் நம் நாட்டின் பெரிய நிறுவனங்களோடு, பல சர்வதேச நிறுவனங்களும் இறங்கியுள்ளன. நமது இந்திய, தமிழக பாரம்பரியத்தில் விருந்தினர்களை உபசரித்தல், விருந்து உபசாரம் செய்தல் என்பது தனிப் பண்பாகும். அவற்றின் தொகுப்பாகவே ஹோட்டல் மேலாண்மை கல்வி உள்ளது. ஹோட்டல் கேட்டரிங், ரெஸ்டாரென்ட், ஹோட்டல் மேனேஜ்மென்ட் என இதில் பலவிதமான பணிகள் உள்ளன. இப்பணியில் உள்ளவர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளரைப் பற்றியும் புரிந்துகொண்டிருப்பதோடு, அவர்களது தேவையறிந்து பணி செய்ய வேண்டும். எந்த சிக்கலையும் சமயோசிதமாக கையாள வேண்டும். ஆங்கிலம் தவிர இன்னும் ஓரிரு மொழிகளும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் அறிந்திருப்பது அவசியம். படித்து முடித்ததும் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் படிப்பாக ஹோட்டல் மேலாண்மை கல்வி உள்ளது.

ஐஎஃப்சிஏ நிறுவனர், பொதுச் செயலாளர் டாக்டர் ‘செஃப்’ சவுந்தர்ராஜன்: இன்று அனைத்து இடங்களிலும் அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ளதாக ஹோட்டல் மேலாண்மை கல்வி உள்ளது. உலக அளவில் ‘செஃப்’களுக்கு தனி மரியாதை, அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1982-ல் ரூ.550 சம்பளத்தில் பணியில் சேர்ந்த நான், ஓய்வு பெறும்போது ரூ.7 லட்சம் சம்பளம் பெற்றேன். படிப்போ, பணியோ விருப்பம், ஈடுபாட்டுடன் செய்தால் சாதிக்கலாம். ‘செஃப்’ பணியில் ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவுகளை, விதவிதமான அனுபவங்களை கற்க முடியும். இப்பணியில் ஒழுக்கம் மிகவும் முக்கியம். இதுவரை 5 ஆயிரம் ‘செஃப்’கள், 200 ஹோட்டல் மேனேஜ்மென்ட் பணியாளர்களை உருவாக்கி உள்ளேன். 50 நாடுகளை சுற்றி வந்திருக்கிறேன்.

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் இயக்குநர் டாக்டர் ஆன்டனி அசோக்குமார்: பிளஸ் 2 முடித்தவர்கள் ஹோட்டல் மேலாண்மை படிப்பில் சேரலாம். இதில் ஆண், பெண் இருவருக்குமே சரிசமமான வேலைவாய்ப்பும், ஊதியமும் கிடைக்கிறது. பிளஸ் 2 முடித்ததும் 4 ஆண்டுகள் இங்கேயே படித்துவிட்டு, பிறகு மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லலாம். கல்லூரியின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல், பாடத்திட்டம், பயிற்றுநர்கள் மட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா, தரவரிசை பட்டியலில் கல்லூரியின் ரேங்கிங் என்ன போன்ற விவரங்களை அறிந்து, அதற்கேற்ற கல்லூரியில் சேர்வது அவசியம். இன்று இந்திய, உலக அளவில் புகழ்பெற்ற பலரும் இத்துறையில் சாதித்து வருகின்றனர். ஒழுக்கத்தோடும், ஆர்வத்தோடும் படித்தால் இத்துறையில் பல சாதனைகளை படைக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த அமர்வில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது கேள்விகள், சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெற்றனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இந்து தமிழ் திசைஎஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட்உயர்வுக்கு உயர்கல்விவேலைவாய்ப்புஹோட்டல் மேலாண்மை கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிHoyel management

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author