Last Updated : 07 Jun, 2020 07:23 AM

 

Published : 07 Jun 2020 07:23 AM
Last Updated : 07 Jun 2020 07:23 AM

தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களும் முயற்சிக்கலாம்; ராணுவ விஞ்ஞானியாக எதுவும் தடையில்லை- டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானி வி.டில்லிபாபு உறுதி

சென்னை

தமிழ்வழிக் கல்வி, கிராமத்துச் சூழல் உள்ளிட்ட அம்சங்கள் எதுவும் ராணுவ விஞ்ஞானியாக தடையில்லை என்று ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு தெரிவித்தார்.

தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத்துடன் (என்டிஆர்எஃப்) இணைந்து ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் நடத்தும் ‘விஞ்ஞானி ஆவது எப்படி?’ என்ற 5 நாள் இணையவழி பயிலரங்கத்தின் மூன்றாவது அமர்வுநேற்று நடைபெற்றது. இதில் ‘ராணுவ விஞ்ஞானி ஆவது எப்படி?’ என்ற தலைப்பில் தேசியவடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் இயக்குநரும் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானியுமான வி.டில்லிபாபு பேசியதாவது:

ராணுவ விமானத்தையும் ஏவுகணைகளையும் மட்டுமே டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் தயாரித்து வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். கைக்கடிகாரம் போல கையில் கட்டிக்கொண்டு பணிபுரியும் கணினி, ட்ரோன், பாராசூட், பேரிடரில் இருந்து
மக்களை மீட்கப் பயன்படுத்தப் படும் ஆயத்த (ரெடிமேட்) ஏணி, பேரிடர் மீட்புப் பணியில் விநியோகிக்க ஏதுவான உணவுப் பண்டங்கள் மற்றும் பொட்டலங்கள், ஆழ்கடல் வாகனங்கள் இப்படி பலவிதமான அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களை வடி
வமைக்கும் பொறுப்பை ராணுவ விஞ்ஞானிகள் வகிக்கிறார்கள்.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், இயற்பியல், வேதியியல், உளவியல் ஆகிய வெவ்வேறு பாடப் பிரிவுகளைப் படித்தவர்களும் ராணுவவிஞ்ஞானி ஆகலாம். இது மட்டுமின்றி தற்காலிக ஆராய்ச்சி பணிகளும் உள்ளன. தொழில்நுட்ப அதிகாரி பணிகளுக்கு ஐடிஐ, இளநிலை அறிவியல் படிப்புகள், பி.காம். படித்தவர்களும் தகுதியானவர்கள். டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தில் மட்டுமின்றி இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் உள்ளிட்ட பல ராணுவ பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிவாய்ப்பு கிடைக்கும்.
பள்ளிப் படிப்பை சிபிஎஸ்இ வழியில் முடித்து ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் படித்தால் மட்டுமே ராணுவ விஞ்ஞானி ஆக முடியும் என்கிற பொதுப்புத்தி உள்ளது. அப்படி எந்த கட்டாயமும் இல்லை.

தமிழ்வழிக் கல்வி பெற்றவர்களும், மாநில வாரிய பள்ளிக்கூடத்தில் படித்தவர்களும், கிராமத்துப் பின்புலத்தில் இருந்து வந்தவர்களும் பெண்களும் ராணுவ விஞ்ஞானி ஆகலாம்.

டி.ஆர்.டி.ஓ.வில் தற்போது167 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஜூலை 10-ம் தேதிக்குள் drdo.gov.inல் இதற்கு விண்ணப்
பிக்கலாம். அதேபோல தேசியமாணவர் வடிவமைப்பு விருதுகள் போட்டியில் பங்கேற்க 5 செப்டம்பர் 2020-க்குள் www.ndrf.res.in
விண்ணப்பிக்கலாம். இவ்வாறு டில்லிபாபு பேசினார்.

இணையவழி பயிலரங்கம் தொடர்ந்து ஜூன் 7, 8 ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், முனைவர் பி.வெங்கட்ராமன் ஆகியோரும் இதில் உரை நிகழ்த்த உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x