Published : 06 May 2020 11:46 AM
Last Updated : 06 May 2020 11:46 AM
இன்று கரோனா என்ற பெருந்தொற்று நோய் உலகையே ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது என்றால் 15 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியப் பெருங்கடலில் உண்டான சுனாமி பல கடலோரப் பகுதிகளை உருக்குலைத்தது. சில மணிநேரத்தில் தங்களுடைய வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட ஆழிப்பேரலையால் நிலைகுலைந்து போன லட்சக்கணக்கானவர்களில் பூம் பூம் மாட்டுக்கார சமூகத்தினரும் அடங்குவர்.
உதவிக் கரம் நீட்டியவர்களும் அந்த விளிம்புநிலை மக்களுக்கு உதவ முன்வரவில்லை. வாழ்வாதாரம் இன்றி தவித்த அம்மக்களின் சந்ததியினருக்கு கல்விக் கண்ணைத் திறந்துவைப்பது மட்டுமே தன்னாலான காரியம் என்று முடிவெடுத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பிரேமா ரேவதி 'வானவில்' பள்ளியைத் தோற்றுவித்தார்.
பிச்சை எடுப்பதே தொழில், குழந்தைத் திருமணம் போன்ற சமூக சிக்கல்களில் உழன்று கொண்டிருக்கும் அம்மக்களின் வாழ்க்கையை மடைமாற்றி அச்சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மாற்று கல்வி அளித்து வருகிறார் 'வானவில்' ரேவதி. தற்போது கரோனா பாதிப்பு காலகட்டத்தில் அனைத்து மாணவர்களின் கல்வியும் குழப்பத்தில் இருக்கும் போதும் தன்னுடைய வானவில் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி சென்றடைய வழிவகை செய்துள்ளார். அவருடன் தொலைபேசியில் உரையாடினோம்.
“கரோனா காலத்தில் நகரக் குழந்தைகள் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் மனச்சோர்வுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனால், கிராமப்புறக் குழந்தைகளுக்கு அத்தகைய சிக்கல் கிடையாது. குளம், மரம் என சுற்றித் திரிந்து விளையாட இடம் உள்ளது. அதுமட்டுமின்றி ஒரே இடத்தில் இருக்கும் அளவுக்கு ஆதியன் சமூகத்து மக்களின் வீடுகளில் இட வசதியும் கிடையாது. பூம் பூம் மாட்டுக்காரக் குழந்தைகளின் பெரும் பிரச்சினை பசி. அதற்கு வானவில் பள்ளி சார்பில் என்ன செய்யலாம் என்று யோசித்தோம். உணவுப் பண்டங்களை நாள்தோறும் கொண்டு சேர்க்கிறோம்.
வானவில் பள்ளியின் 80 சதவீத மாணவர்கள் நாகப்பட்டினம் டவுன் அருகே இருக்கும் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். பள்ளிப் படிப்பை முடித்த எங்களுடைய முன்னாள் மாணவர்கள் திருவாரூர் மாவட்டத்திலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் இருக்கிறார்கள். தற்போது படிக்கும் பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை அந்தந்த வகுப்பாசிரியர்கள், முன்னாள் மாணவர்களிடம் கதைப் புத்தகங்ககளைக் கொடுத்து இந்த மூன்று ஊர்களில் நாங்கள் ஏற்படுத்தி இருக்கும் சமூகக் கூடங்கள், நூலகங்களில் அனைவரையும் வரவழைத்து வாசிப்பு நேரம் தொடங்கி இருக்கிறோம். அதிகம் பேர் கூடக்கூடாது என்பதால் அங்கிருந்து புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றும் படித்து வருகிறார்கள்.
எங்களுடைய வானவில் சமூகக் கூடத்தில் இருக்கும் பெண்களில் சிலர் நொறுக்குத் தீனியாக சுண்டல், புட்டு போன்ற சத்தான தின்பண்டங்களைத் தினந்தோறும் சமைத்துத் தருகிறார்கள். இவற்றைக் காலை 11 மணி அளவில் அந்தப் பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்குக் கொண்டு சேர்த்துவிடுகிறோம்.
எங்களுடைய ஆசிரியர்கள் கதைகள் சொல்லி அதைப் பதிவு செய்து வாட்ஸ் அப் மூலமாக மாணவர்களுக்கு அலைபேசியில் அனுப்பி வருகிறார்கள். எங்களுடைய கிராமப் பகுதிகளைப் பொறுத்தவரை 100-ல் 30 பேரிடம்தான் ஆன்ட்ராய்ட் அலைபேசி இருக்கிறது. ஆகவே யாரிடம் இருக்கிறதோ அவர்கள் வீட்டுக் குழந்தைகளோடு மேலும் நான்கு, ஐந்து குழந்தைகளும் ஒன்று கூடிப் படித்து வருகிறார்கள். அதிலும் கூடுமானவரை சமூக விலகலையும் கடைப்பிடிக்க கற்றுக் கொடுத்து இருக்கிறோம்.
அதேநேரத்தில் நிதர்சனத்தைத் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் வேண்டும். பெரிய வீட்டில் வசிப்பவர்களுக்குத்தான் சமூக இடைவெளி சாத்தியம். இந்த மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கட்டித் தந்த பத்துக்கு பத்து பரப்பளவு கொண்ட வீடுகளில் வசித்து வருகிறார்கள் . ஆகையால் மூன்றடி இடைவெளி விட்டு ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டும் என்பது முடியாத காரியம். உண்டு, உறங்க, படிக்க, விளையாட என அனைத்துக்கும் ஒரு குறுகலான இடம் மட்டுமே இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. இது மட்டுமின்றி இந்த பகுதி மக்களுக்குத் தண்ணீர் என்பதையே சொகுசு பட்டியலில்தான் சேர்க்க வேண்டும். உதாரணத்துக்கு இங்குள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் குடிநீர் இறைத்துவர மூன்று கி.மீ. தொலைவு செல்ல வேண்டி இருக்கிறது. ஏனென்றால் உள்ளூர் நிலத்தடி நீரைக் குடிக்க, குளிக்க, கைகழுவப் பயன்படுத்த முடியாதபடி இரும்புச் சத்து அதீதமாக உள்ளது. ஆகையால் கை கழுவுவதற்கான தண்ணீரையும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.
இருந்தபோதும், கை கழுவுதல், குளித்து சுத்தமாக இருத்தல் போன்றவற்றை எங்களுடைய மாணவர்கள் மிக நேர்த்தியாகக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் எடுத்து அனுப்பும் ஒளிப்படங்களிலேயே அது தெரிகிறது. அதே போல எங்களுடைய பள்ளி குழந்தைகளில் யாருக்காவது இருமல், காய்ச்சல் இருக்கிறதா என்பதை தினந்தோறும் சோதிக்கிறோம். அது குறித்த தகவலைப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறோம். அப்படி ஒரு வேளை யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் அவர்கள் அருகில் மற்றவர்கள் செல்லாமல் பாதுகாப்பான இடத்தில் அவர்களைப் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.
ஆகையால் அந்தந்தப் பகுதியில் வசிக்கும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள், அங்குள்ள முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் தினமும் காலை மாணவர்களுடன் சேர்ந்து கை கழுவும் சடங்கை செய்வார்கள். பிறகு உணவுப் பண்டங்களை விநியோகிப்பார்கள் அவற்றைக் குழந்தைகள் சாப்பிட்ட பிறகு கதைசொல்லி வகுப்பு தொடங்கும். புத்தக வாசிப்பு நேரம் நடைபெறும். அங்கிருந்தபடியே வாசிக்கும் குழந்தைகளும் உண்டு, அல்லது அவரவர் வீடுகளுக்குப் புத்தகங்களை எடுத்துச் செல்பவர்களும் உண்டு. இப்படிக் கடந்த 45 நாட்களாக இத்தகைய செயல்பாடுகளில் வானவில் பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சமூகக் கூடப் பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுவருகிறார்கள்”.
இவ்வாறு 'வானவில்' ரேவதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT