Published : 14 Mar 2020 11:08 AM
Last Updated : 14 Mar 2020 11:08 AM

எம்இ, எம்டெக் மாணவர் சேர்க்கைக்கான `கேட்’ நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 18.8 சதவீதம் பேர் தேர்ச்சி

எம்இ, எம்டெக் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்தேர்வில் 18.8சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் உயர் கல்விநிறுவனங்களில் உதவித்தொகையுடன் எம்இ, எம்டெக் உள்ளிட்ட முதுநிலை பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளில் சேர கேட் (GATE) நுழைவுத்தேர்வு தேர்ச்சி கட்டாயமாகும்.

மேலும், ஒருசில தனியார் கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை இல்லாமல் இப்படிப்புகளில் படிக்கவும் கேட் தேர்ச்சியை எதிர்பார்க்கின்றன. கேட் நுழைவுத்தேர்வை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, டெல்லிஉள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும்.

மொத்தம் 100 மதிப்பெண்ணைக்கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ்,எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட25 பாடப்பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

அந்த வகையில், 2020-2021-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வு கடந்த பிப்ரவரி 1,2,8,9 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. டெல்லி ஐஐடி நடத்திய இத்தேர்வை அகில இந்திய அளவில் 6 லட்சத்து 85 ஆயிரத்து 88 மாணவ, மாணவிகள் எழுதினர்.

தேர்வு முடிவுகள் மார்ச் 16 -ம்தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு 3 நாட்கள் முன்னதாகவே நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் 18.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக டெல்லி ஐஐடி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x