Published : 06 Mar 2020 02:32 PM
Last Updated : 06 Mar 2020 02:32 PM

சென்னை பல்கலை. துணைவேந்தர் தேர்வுக்குழுத் தலைவர் விவகாரம்: பன்னாட்டுச் சமூகம் கண்டித்த ஒருவரை நியமிப்பதா? - வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவின் தலைவராக ஜேஎன்யுவின் துணைவேந்தரை தமிழக ஆளுநர் பரிந்துரை செய்திருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக, வைகோ இன்று (மார்ச் 6) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தோரை துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார்.

தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்திற்கு கேரளாவைச் சார்ந்த பிரமிளா தேவியையும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆந்திராவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரியையும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவையும் துணைவேந்தர்களாக நியமனம் செய்தார்.

தமிழகத்தில் தகுதியும் திறமையும் அனுபவமும் வாய்ந்த பேராசிரியர்கள் பலர் இருந்தும் அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு வெளி மாநிலங்களில் இருந்து துணைவேந்தர்களை ஆளுநர் புரோஹித் தேர்வு செய்தார்.

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைத் தேர்வு செய்ய நீதிபதி ஜெகதீசன் தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு துணைவேந்தர் பொறுப்புக்கு விண்ணப்பித்த 17 பேரில் 6 பேரை தேர்வு செய்தது. அதிலும் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்த கடைசி மூவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் மூன்று பேரை மட்டும் பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பியது.

ஆனால், தேர்வுக் குழுவின் பரிந்துரையில் இடம் பெறாத, ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சூரிய நாராயண சாஸ்திரியை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமனம் செய்து ஆளுநர் ஆணை பிறப்பித்தார்.

இதேபோன்றுதான் மற்றப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களிலும் தேர்வுக்குழுவின் பரிந்துரைகள் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டன. தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தேர்வுக்குழுவின் தலைவராக புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ்குமாரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பரிந்துரை செய்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் சங் பரிவார் அமைப்புகளின் நேசத்திற்குரிய ஜெகதீஷ்குமார் ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பிறகுதான் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தாக்குதல் நடத்தியது.

கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டபோது அதை எதிர்த்துப் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கடந்த ஜனவரி 5, 2020-ல் காவிக் கும்பல் மூர்க்கத்தனமாக ஆயுதங்களோடு நுழைந்து தாக்குதல் நடத்தினர். காவல்துறையையும் ஏவிவிட்டு மாணவர்கள், பேராசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இவை அனைத்திற்கும் பின்னணியில் இருந்தவர் ஜேஎன்யு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் ஆவார். ஜேஎன்யு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பிலிருந்து ஜெகதீஷ்குமாரை நீக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டு 8 ஆயிரத்து 747 பேர் ஒன்றிணைந்து அறிக்கை வெளியிட்டனர்.

அத்தகைய நபரை சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வுக்குழுத் தலைவராக தமிழக ஆளுநர் நியமித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். உடனடியாக இந்த நியமனத்தை ரத்து செய்து தமிழ்நாட்டில் உள்ள மிகச் சிறந்த கல்வியாளர்கள், பேராசிரியர்களில் ஒருவரை துணைவேந்தர் தேர்வுக்குழு தலைவராக நியமிக்க வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x