Published : 24 Feb 2020 11:10 AM
Last Updated : 24 Feb 2020 11:10 AM

‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ மாணவர்களே: ஆஸ்திரேலிய சிறுவனின் கதறலுக்கு கிடைத்தது பேராதரவு- பிரபல ரக்பி அணியை வழிநடத்தி சென்றான்

அன்பு மாணவர்களே, ‘உருவு கண்டுஎள்ளாமை வேண்டும்’ என்று நம் பல ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் அறிவுரை கூறி சென்றுள்ளார். உருவம் ஒரு விஷயமே இல்லை. ‘ஆளுமை’ (பர்சனாலிட்டி) என்பது வாட்ட சாட்டமான உடல், அழகிய முகம் என்பதல்ல. ஒருவரிடம் உள்ள திறமை, குணம், பண்பு போன்ற பல விஷயங்களைக் கூறலாம்.

எனினும், ஒருவரின் உருவத்தை கிண்டல் செய்யும் போக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதில்பாதிக்கப்பட்டவன்தான் ஆஸ்திரேலியாவின் 9 வயது சிறுவன் குவான்டன் பேலஸ். தான் குள்ளமாக இருப்பதால் எல்லோரும் கிண்டல் செய்கின்றனர். என்னை ஏதாவது செய்யுங்கள் என்று கண்ணீர் விட்டு அவன் அழும்காட்சியை அவருடைய தாய் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த காணொலியை தற்போது பலலட்சம் பேர் பார்த்து, குவான்டனுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

குவான்டனின் அழுகையை பார்த்தவர்களையும் அழ வைக்கும் அளவுக்குஇருந்தது. இப்போது, உலகம் முழுவதும்பேராதரவு பெற்ற குவான்டனை ஆஸ்திரேலிய ரக்பி அணியான ஆல்-ஸ்டார் அணிக்கு வழிநடத்த சொல்லி வீரர்கள் அழைத்து மரியாதை செலுத்தினர். ரக்பி விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சிறுவன்குவான்டன், தன்னுடைய ஆதர்ஷ் ரக்பி வீரர்களுடன் களத்துக்கு வந்ததால் கவலையை மறந்து மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றான்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யாரகா பேல்ஸ் இவருடைய 9 வயது மகன் குவான்டன் பேல்ஸ். குவான்டன் சக மாணவர்களை விட உயரம் குறைவாக இருப்பதால் வகுப்பில் மாணவர்கள் அவனை ஏளனம் செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர். ஆனால், கடந்த புதன் கிழமை வழக்கத்தை விட அதிக ஏளனத்துக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகி உள்ளான்.

பள்ளி முடிந்ததும் தனது தாய்க்காக காத்திருந்த குவாண்டன், அவர் வந்ததும் காரில் சென்று வேகமாக ஏறி அழத்தொடங்கினான். அவனுடைய அழுகைக்கான காரணத்தை உணர்ந்த தாய், அதற்கு முற்றுபுள்ளி வைக்கநினைத்து, குவான்டன் கண்ணீர் விட்டு அழும் காட்சியை காணொலியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அந்த காணொலியில், ‘‘எல்லோரும்என்னை குள்ளம் என்று கேலி செய்கின்றனர். தலையில் அடிக்கின்றனர். என்னை ஏதாவது செய்யுங்கள்’’ என்று கதறி அழுகிறான்.

இதுகுறித்து சிறுவனின் தாய் யாரகா பேல்ஸ் தனது பதிவில், குவான்டனின் உயரத்தைக் கேலி செய்யும் வகையில் அவன் தலையில் ஒரு மாணவன் தட்டுவதை நானே நேரில் பார்த்தேன். நான் பள்ளியில் புகார் செய்து பிரச்சினை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக காரில் ஓடிவந்து ஏறிய அவன், பிறகு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கிவிட்டான்.

ஒரு தாயாக எனது பொறுப்பில் இருந்து நான் தவறிவிட்டதாகக் கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்துவிட்டது. சக மாணவர்களைக் கேலி செய்வதால் எத்தகையவிளைவு ஏற்படும் என்பதை உங்கள்குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்என்று பிற பெற்றோர்கள் மற்றும்பள்ளிகளுக்கு எனது வேண்டுகோள்” என உருக்கமாக கூறியிருந்தார்.

அந்தக் காணொலியை பகிர்ந்த சிறிது நேரத்திலேயே #குவான்டன் என்ற ஹேஷ்டேக் மூலம் உலக முழுவதும் சிறுவனுக்கு ஆதரவு பெருகியது.

இந்நிலையில், குயின்ஸ்லாந்தில் ஆல்-ஸ்டார் அணிக்கும், நியூஸிலாந்து மாரியோஸ் அணிக்கும் இடையிலான ரக்பி போட்டி வெள்ளிக்கிழமை நடந்தது. அந்த போட்டியில் நடக்கும்தங்கள் நாட்டு அணியை வழிநடத்திச்செல்லும் மரியாதை சிறுவன் குவான்டன் பேலஸுக்கு வழங்கப்பட்டது.

ரக்பி அணியின் கேப்டன் ஜோயல்தாம்ஸனின் கையைப் பிடித்துக் கொண்டு சிறுவன் குவான்டன் மைதானத்துக்குள் மகிழ்ச்சியுடன் வந்தான். அப்போது அணியின் கேப்டன்ஜோயல் கூறுகையில், “உனக்கு ஒன்றும்இல்லை குவான்டன். நீ நன்றாக இருக்கிறாய், உன்னைச் சுற்றி நாங்கள் இருக்கிறோம். இந்த வாரம் முழுவதும் எங்களுடன் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்

குவான்டன் தாயார் யாரகா பேலஸ் நிருபர்களிடம் கூறுகையில், “எனது மகன் அவனின் வாழ்க்கையில் மோசமான நாளையும் சந்தித்தான்,இன்று அவனின் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாளையும் சந்தித்துவிட்டான். ஏளனத்துக்குப் பாதிக்கப்படுபவர்களுக்கு இறைவன் என்ன கொடுப்பார் என்பதை இதிலிருந்து அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்” எனத் தெரிவித்தார்

பல்வேறு நாடுகளில் இருந்து குவான்டனுக்கு ஆதரவும், உதவிகளும் குவிந்து வருகின்றன. மேலும், சிறு வயதில் குவான்டன் செய்யும் குறும்பு காணொலிகளும் பகிரப்பட்டு வருகின்றன. மனிதனுக்குள் இருக்கும் மனிதத்தை குவான்டன் வெளிக் கொண்டு வந்து வென்று விட்டான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x