Published : 24 Feb 2020 09:50 AM
Last Updated : 24 Feb 2020 09:50 AM

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை புகார்களுக்கு இடமின்றி நடத்த வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

பொதுத்தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த இக்கூட்டத்தில் ஆட்சியர் மலர்விழி தலைமை வகித்து பேசியதாவது:

வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதிவரை பிளஸ் 2 பொதுத் தேர்வும், மார்ச் 4-ம் தேதி தொடங்கி 26-ம் தேதிவரை பிளஸ் 1 பொதுத்தேர்வும் நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு, 2 தனித்தேர்வு மையங்கள் உட்பட 70 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை 9,370 மாணவர்கள், 9,819 மாணவியர் என மொத்தம் 19 ஆயிரத்து 189 பேர் எழுதுகின்றனர்.

வினாத்தாள் காப்பு மையங்கள்

இதில் பிளஸ் 1 தேர்வு 68 மையங்களில் நடக்கிறது. 9,456 மாணவர்கள், 9,986 மாணவியர் மற்றும் 1,784 தனித்தேர்வர்கள் என மொத்தம் 21 ஆயிரத்து 226 பேர் எழுதுகின்றனர்.

மேலும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 5 தனித்தேர்வு மையங்கள் உட்பட 87 மையங்களில் நடக்க உள்ளது. இந்த தேர்வை 12 ஆயிரத்து 264 மாணவர்கள், 11 ஆயிரத்து 90 மாணவியர் என மொத்தம் 23 ஆயிரத்து 354 பேர்எழுதுகின்றனர்.

மேல்நிலை பொதுத்தேர்வு வினாத்தாள்கள் 5 கட்டுக்காப்பு மையங்கள், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு வினாத்தாள்கள் 6 கட்டுக்காப்பு மையங்கள் என 11 மையங்களில் சிசிடிவி கேமராகண்காணிப்பு வைக்கப்பட வேண்டும்.

தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர்கள் சுமார் 3,500 பேர் இந்த பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடும் வகையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்விஅலுவலர் மூலம் தேர்வுப் பணிக்கான ஆணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேல்நிலை பொதுத்தேர்வு 23 வழித் தடங்களிலும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு 30 வழித் தடங்களிலும் என ஒவ்வொரு நாளும் தேர்வுமுடிந்த பின்னர், மாவட்ட விடைத்தாள்சேகரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்படும். மார்ச் 1-ம் தேதி முதல்விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடியும் வரை 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்தியகாவலர் நியமனம் செய்யப்பட உள்ளது.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், தேர்வு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு தடையில்லாமின்சாரம் கிடைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்வு நாட்களில் அனைத்து தேர்வு மையங்கள் முன்பும்பேருந்துகள் நின்று செல்வதை வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பேருந்து வசதி இல்லாத கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வுக்குசெல்ல வசதியாக பேருந்து வசதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x