Published : 18 Feb 2020 07:18 AM
Last Updated : 18 Feb 2020 07:18 AM

பள்ளிகளை தரம் உயர்த்த மக்கள் பங்களிப்பு நிதிக்கு விலக்கு: அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிப்பு நிதி கோரப்படுவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து அரசு பரிசீலீக்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது, ‘‘பள்ளிகளைத் தரம் உயர்த்த உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம், மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.2 லட்சம் பங்களிப்பு நிதியாக தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

மத்திய இடைநிலை கல்வி இயக்கம், அனைவருக்கும் கல்வி இயக்கம் இவற்றுக்கு மாற்றாக தற்போது மத்திய அரசு ‘சமர சிக் ஷாஅபியான்’ எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின்கீழ் நிதி பெறப்படுகிறது.

மேலும், ஒரு ஆண்டில் 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும்போது மக்கள் பங்களிப்பு நிதியாக ரூ.2 கோடி கிடைக்கும். இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.34 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ரூ.2 கோடி எதையும் நிறைவு செய்யாது. எனவே, பொதுமக்களிடம் பங்களிப்பு நிதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்குப் பதில் அளித்தஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘‘குக்கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ளபள்ளிகளைத் தரம் உயர்த்தும்போது இந்த நிதியில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. உறுப்பினர் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பள்ளிகளைத் தரம் உயர்த்தமக்களிடம் இருந்து நிதி பெறுவதில் விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x