Published : 17 Feb 2020 07:38 AM
Last Updated : 17 Feb 2020 07:38 AM

இந்தியாவின் கடைசி குடிமகன் வரை பயன்பெற இந்திய மொழிகளில் டிஜிட்டல் உள்ளடக்கம் வரவேண்டும் : குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

தொழில்நுட்பத்தின் நன்மை இந்தியாவில் உள்ள கடைசி மனிதன் வரை செல்ல வேண்டுமென்றால், ஆய்வுக் கட்டுரைகள், கருத்துக்கள் என அனைத்து உள்ளடக்கமும் டிஜிட்டல் தலத்தில் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்’’ என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பண்டிட் துவாரகா பிரசாத் மிஸ்ரா இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (பிடிபிஎம் ஐஐடிடிஎம்) தொழில்நுட்பம் குறித்த மாநாடு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். அப்போது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாவது:

இந்திய சமூகத்தின் நலனுக்காக டிஜிட்டல் தலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை இளைஞர்கள் கொண்டு வரவேண்டும். உலக அளவில் தொழில்நுட்பம் மிக உயரிய இடத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றிய புரிதல் மிக குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் தொழில்நுட்பத்தின் உள்ளடக்கம் நமதுபிராந்திய மொழிகளில் இல்லை.

குறிப்பாக நமது கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல் தலத்தின் பயன்பாடு இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. உலக அளவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஆய்வுக் கட்டுரைகள், கருத்துக்கள், புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வின் தோல்வி உள்ளிட்ட உள்ளடக்கம் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளன. இதனை நாம் மொழி பெயர்க்க வேண்டிய கட்டாயமும், அவசியமும் உள்ளது. அதேபோல் இந்திய பிராந்திய மொழிகளில் உள்ள ஆய்வுகள், கட்டுரைகள், கருத்துகள், யோசனைகள், முயற்சிகள் என அனைத்தும் டிஜிட்டல் தலத்தில் பதிவேற்ற வேண்டும்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு ஆளுமை ஆகியவை நாட்டில்உள்ள அனைத்து மக்களுக்கும் சென்று பயனடைய வேண்டும் என்றால், அதன் உள்ளடக்கத்தை அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்க வேண்டும். இந்திய மொழிகளில் அதிக டிஜிட்டல் உள்ளடக்கம் இருந்தால்தான், அந்த துறையில் நம்மால் முன்னேற முடியும். மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைத்து தரப்பினரும் பிராந்திய மொழியில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இது சமூகம் மற்றும் தேசத்தை டிஜிட்டல் தலத்தில் உயர்த்துவதற்கான பொறுப்பாகும்.

இதனைத் தொடர்ந்து, தாய்மொழியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை நோக்கி நாம் படிப்படியாக செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரி மட்டத்தில் இருந்தே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறப்பு கவனம் செலுத்தி கல்வியறிவை அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகளை நாம் செய்ய வேண்டும்.

இந்த துறையில் இருக்கும் இளைஞர்கள் புதிய யோசனைகளை சமூகத்துக்கு கொண்டு வர வேண்டும். சாதாரண மக்களின்வாழ்க்கையை எளிதாக்குவதற்கும்,ஆட்சியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கும் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்பாடு குறித்த முயற்சிகளை இளைஞர்கள் கொண்டுவர வேண்டும்.

இந்தியாவில் இணையத்தில் இணையும் 10 புதிய பயனர்களில் 9 பேர், இந்திய மொழி பயனர்களாக இருப்பதாக கேபிஎம்ஜி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. எனவே, மக்களுக்கும் டிஜிட்டலுக்கும் மொழியால் ஏற்படும் பிளவுக்கு தீர்வு காண அரசுகள், தனியார் துறை, தொழில் வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

மத்திய அரசு சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தையும் அதிவேக பிராட்பேண்டுடன் இணைக்கும் நோக்கத்துடன் பாரத்நெட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ், நான்கு லட்சம் கிலோ மீட்டருக்கும் அதிகமான ஆப்டிகல் பைபர்கேபிள்கள் சுமார் 1.5 லட்சம் கிராமபஞ்சாயத்துகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஆப்டிகல் பைபர் கேபிள்கள் மூலம் சுமார் 1.35 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x