Last Updated : 07 Feb, 2020 04:36 PM

 

Published : 07 Feb 2020 04:36 PM
Last Updated : 07 Feb 2020 04:36 PM

அரசுப் பள்ளியில் சிந்தனை, கற்பனைத் திறனோடு நடந்த நாடகத் திருவிழா: ரசித்து மகிழ்ந்த குழந்தைகள்

சிந்தனை, கற்பனைத் திறன், பேச்சாற்றலை வெளிப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளியில் இன்று நடந்த நாடகத் திருவிழாவை குழந்தைகள் ரசித்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம், கொம்யூன் நல்லவாடு அரசு நடுநிலைப் பள்ளியில், இன்று யாழ் கலை மையம் சார்பில் நாடகத் திருவிழா நடைபெற்றது. மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட, எளிய வகையில் பல அரிய தகவல்களை வெளிப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளி அறிவியல் ஆசிரியை ரேணுகாதேவி வரவேற்க, பள்ளித் தலைமையாசிரியர் சங்கர் விழாவைத் தொடங்கி வைத்தார். இயக்குனர் கோபி இயக்கத்தில் “மீன் வாங்கலையோ மீன்” என்ற தலைப்பில் பிரபேந்திரன் மற்றும் பத்மனாபன் ஆகியோரின் நடிப்பில் நடைபெற்ற நாடகத்தில் கடல், கடலில் ஏற்படும் ஓசை, நிறம், வளம், உட்பட பல அரிய தகவல்கள் மிகவும் தெளிவாக இருந்தன. அனைத்து மாணவர்களும் ஒன்றி ரசிக்கும்படியும் மாணவர்களும் இணைந்து பாடல்கள் பாடி மகிழும் வகையில் நாடகம் நடைபெற்றது. நிகழ்வில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்று ரசித்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்துத் தலைமையாசிரியர் சங்கர் கூறுகையில், "குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்க, அவர்கள் ரசிக்கும் வகையில் நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கதை சொல்லும் விதத்தால் நம்ப முடியாத விஷயங்களையும் ரசிக்கும்படி செய்யலாம் என்பதை உணர்த்தவும் குழந்தைகளின் திறனை மேம்படுத்தவும் அவர்களின் சிந்தனை, பேச்சாற்றல், கற்பனைத் திறன்களை வெளிக்கொண்டு வரவுமே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது" என்றார்.

குழந்தைகள் தரப்பில் கூறுகையில், "கண் முன்னால் நேரடியாக நடிப்பதை முதல் முறையாகப் பார்த்தோம். உணவு இடைவேளை முன்பாக நாடகம் நடந்தது. பசியே எடுக்கவில்லை. நீண்ட நேரம் ரசித்துச் சிரித்தோம்" என்றனர்.

நாடகக் குழுவினர் கூறுகையில், "புதுவையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்த நாடகத்தினை அரங்கேற்றம் செய்து பாராட்டுகளைப் பெற்றுள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x