Published : 04 Feb 2020 09:46 AM
Last Updated : 04 Feb 2020 09:46 AM

செய்திகள் சில வரிகளில் - தொழில்நுட்ப கோளாறு: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று ஜம்முவில் நேற்று விபத்துக்குள்ளானது.

இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “ ஜம்மு- காஷ்மீரின் ரியாசி பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா ரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ருட்குட்டில் பகுதியில் தரையிரங்கும்போது விபத்துக்குள்ளானது. பைலட்கள் 2 பேரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்றனர்.

மருத்துவ உபகரணங்களுக்காக செஸ் வரி பொது மக்களை பாதிக்கும் : எம்டிஏஐ

புதுடெல்லி

மருத்துவ உபகரணங்களில் உள்நாட்டு உற் பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அதற்கு 5 சதவீத செஸ் வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ தொழில்நுட்பச் சங்கம் (எம்டிஏஐ) வெளியிட்ட அறிக்கை: மருத்துவ உபகரணங்களுக்கு ஏற்கெனவே 7.5 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. தற்போது செஸ் வரியாக 5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமாகும் உபகரணங்களின் விலை இறுதியாக சிகிச்சை பெறும் மக்களையும், மருத்துவ துறையையும் நேரடியாக பாதிக்கும்.

முக்கிய உபகரணங்கள் எதுவும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாதநிலையில், செஸ் வரி விதிப்பால் வெளிநாடுகளில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக உபகரணங்கள் உள்நாட்டுக்குள் வருவது அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

நாட்டின் தேயிலை உற்பத்தியில் சிறு விவசாயிகளின் பங்கு அதிகரிப்பு

கொல்கத்தா

மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் இந்திய தேயிலை வாரியம் செயல்படுகிறது. இது சிறு, பெரு விவசாயிகள் மூலம் தேயிலையை உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தி 138.9 கோடி கிலோவாக இருந்தது.

அதில், சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் (எஸ்டிஜி) மூலம் 68.5 கோடி கிலோவும் (49%), பெரிய தேயிலை உற்பத்தியாளர்கள் (பிடிஜி) மூலம் 70.4 கோடி கிலோவும் (51 சதவீதம்) தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 133.8 கோடி கிலோ தேயிலையில், எஸ்டிஜி மூலம் 64.6 கோடி கிலோவாக (48.29 %) இருந்தது. அதன்படி, 2019-ம் ஆண்டில் எஸ்டிஜியில் தேயிலை உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x