Published : 03 Feb 2020 10:12 AM
Last Updated : 03 Feb 2020 10:12 AM

நிகழ்வுகள்: உலக புற்றுநோய் நாள் - பிப்ரவரி 4

பிப்ரவரி 4: உலகப் புற்றுநோய் நாள்

உலகில் அதிக மரணங்களை விளைவிக்கும் நோய்களில் இரண்டாம் இடத்தை வகிக்கும் கொடிய நோய் புற்றுநோய். சரியான நேரத்தில் நோய் இருப்பதைக் கண்டு பிடித்து முறையான சிகிச்சை அளித்தால் புற்றுநோயில் இருந்து விடுபட முடியும். ஆனால், இவை குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவாக இருப்பதாலும் அனைவருக்கும் புற்றுநோய் சிகிச்சை சென்றடையாமல் இருப்பதாலும் ஆண்டுக்கு பல லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கிறார்கள்.

இந்தக் குறைகளை நீக்க சர்வதேச புற்றுநோய்க் கட்டுப்பாட்டு சங்கம் பிப்ரவரி 4-ம் தேதியை உலகப் புற்றுநோய் நாளாக அனுசரிக்கிறது. ஐநா துணை அமைப்பான உலகசுகாதார நிறுவனமும் இந்த நாளை அங்கீகரித்துள்ளது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் புற்றுநோய் சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் புற்றுநோய் தடுப்பில் மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் எப்படிப் பங்களிக்க முடியும் என்பதற்கான விழிப்புணர்வை அதிகரித்து புற்றுநோய் தடுப்பு செயல்பாடுகளில் அனைவரும் பங்கேற்பதை ஊக்குவிப்பதும் சாத்தியப்படுத்துவதும் இந்த நாளின் நோக்கங்களாகும்.

பிப்ரவரி 5: ரீடர்ஸ் டைஜஸ்ட் தொடங்கிய நாள்

புகழ்பெற்ற அமெரிக்க பல்சுவை குடும்ப இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட் இன்று உலகெங்கும் 4 கோடிக்கு மேற்பட்டோரால் படிக்கப்பட்டுவருகிறது. இதன் முதல் இதழ் 1922 பிப்ரவரி 5 அன்று நியு யார்க் மாகாணத்தின் பிளஸண்ட்வில்லியில் வெளியானது. டிவிட் வாலஸ் என்பவரும் அவருடைய மனைவி லீலா பெல் வாலஸும் இந்த இதழைத் தொடங்கினர். ஆண்டுக்கு பத்து இதழ்கள் பிரசுரிக்கப்படுகின்றன. 2009 வரை அமெரிக்காவில் மிக அதிகம் பேரால் படிக்கப்படும் இதழாக விளங்கியது. தற்போது உலகின் 70 நாடுகளில் 21 மொழிகளில் வெளியாகிறது. இந்தியாவில் 1954 முதல் ரீடர்ஸ் டைஜஸ்ட் வெளியாகிறது.

பிப்ரவரி 6: கான் அப்துல் கபார் கான் பிறந்த நாள்

எல்லை காந்தி என்று அழைக்கப்படு பவரும் காந்தியைப் போலவே இந்திய சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுத்தவருமான கான் அப்துல் கபார் கான் 1890 பிப்ரவரி 6 அன்று இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார். அரசியலிலும் ஆன்மிகத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த அப்துல் கபார் கான் காந்தியின் நெருங்கிய
நண்பருமாவார்.

இவர் தொடங்கிய சமூக சீர்திருத்த இயக்கமான ‘குடாய் கிட்மாட்கர்’(இறைவனின் ஊழியர்கள்) வன்முறையைத்தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவதற்கானது. இதன் செயல்பாடுகளுக்காக அப்துல் கபார் கான் மீதும் அவரது இயக்கத்தினர் மீதும் பிரிட்டிஷ் அரசின் கொடிய ஒடுக்குமுறை ஏவப்பட்டது.

அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காந்தி தொடங்கிய உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று கைதானார். இந்தியா-பாகிஸ் தான் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தார். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்தபோது அங்கு இந்திய உளவாளி என்று தூற்றப்பட்டார். 1987-ல் இவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்ற முதல் அயல்நாட்டவர் இவர்தான். 1988 ஜனவரி 20 அன்று பாகிஸ்தானின் பெஷாவரில் மரணமடைந்தார்.

பிப்ரவரி 7: பாவாணர் பிறந்தநாள்

தனித் தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர் மொழிஞாயிறு என்றழைக்கப்படும் தேவநேயப் பாவாணர். இவர் 1902 பிப்ரவரி 7 அன்று சங்கரன்கோவிலில் பிறந்தார். தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டே தமிழ் மொழி ஆராய்ச்சியிலும் வேர்ச்சொல் ஆராய்ச்சியிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

தனக்கிருந்த பன்மொழி அறிவின் துணை கொண்டு உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்தான் என்று வாதிட்டார். மிகத் தொன்மையான காலத்திலேயே தமிழ் செம்மையான மொழியாக உருப்பெற்றது என்பதை தரவுபூர்வமாக விளக்கினார். சம்ஸ்கிருதம்.

கிரேக்கம். லத்தீன் உள்ளிட்ட பல்வேறு தொன்மையான மொழிகளில் தமிழ்ச் சொற்கள் பலவும் பயன்படுத்தப்படுவதை நிறுவினார். கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். உரைகளையும் நிகழ்த்தியுள்ளார். 35க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1969, 1971, 1981-ல் தமிழக அரசால் நடத்தப்பட்ட மூன்று உலகத் தமிழ் மாநாடுகளிலும் பங்கேற்றார். 1979-ல் தமிழக அரசின ‘செந்தமிழ்ச் செல்வர்’ விருதைப் பெற்றார். 1981 உலகத் தமிழ் மாநாட்டில் ‘மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

- தொகுப்பு: கோபால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x