Last Updated : 03 Feb, 2020 08:02 AM

 

Published : 03 Feb 2020 08:02 AM
Last Updated : 03 Feb 2020 08:02 AM

பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைப்பு; முக்கிய பாடங்களில் 40 சதவீதம் திறனறி கேள்விகள் இடம்பெறும்: தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல்

தேசிய நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள ஏதுவாக பொதுத்தேர்வு வினாத்தாளில் 40 சதவீதம் வரை திறனறி கேள்விகள் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வியில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இந்த வகுப்புகளுக்கு நடப்பாண்டு புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களுக்கான செய்முறை மற்றும் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வரு கின்றன. இதற்கிடையே வழக் கத்துக்கு மாறாக நடப்பாண்டு பொதுத்தேர்வில் திறனறி கேள்விகள் அதிகளவில் இடம் பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே அடுத்தகட்ட உயர் படிப்புகளுக்கு உதவியாக இருக்கும். மேலும், நீட், ஜேஇஇ, சிஏ உட்பட தேசிய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைவாக இருக்கிறது.

குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்கவே பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் பாடங்களுக்கான வினாத்தாள் கட்டமைப்பு (ப்ளூபிரின்ட்) வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு கேள்வித்தாள் வடிவமைப்பு குறித்த புரிதல் கிடைப்பதற்காக மட்டுமே மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது. அதேநேரம் மாதிரி வினாத்தாள் அடிப்படையில் பொதுத்தேர்வு கேள்வித் தாள் இருக்காது.

எந்த பாடத்தில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படலாம். இந்தாண்டு கல்லூரி பேராசி ரியர்கள் மேற்பார்வையின் கீழ் திறமையான ஆசிரியர்கள் குழுவை கொண்டு பாடவாரி யாக வினாத்தாள்கள் வடிவமைக் கப்பட்டுள்ளன.

அதனால், நடப்பாண்டு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் சற்று கடினமானவே இருக்கும். கணிதம், விலங்கியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 40 சதவீதம் வரை திறனறி மற்றும் மறைமுக கேள்விகள் இடம்பெறக்கூடும். அதில் 10 முதல் 20 சதவீதம் வரையான வினாக்கள் பாடத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன.

அதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களை மட்டுமின்றி பாடங்கள் சம்பந்தமாக விரிவாக படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். அதேநேரம் மெல்ல கற்கும் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படாது. அவர்கள் தேர்ச்சி பெறக்கூடிய வகையிலான வினாக்களுக்கும் கணிசமான பங்களிப்பு தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x