Published : 02 Feb 2020 07:05 AM
Last Updated : 02 Feb 2020 07:05 AM

சிறப்பாக மரம் வளர்த்த பள்ளிகளுக்கு ‘ஈஷா பசுமை பள்ளி’ விருது: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் வழிகாட்டுதலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரக் கன்று வளர்ப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 35 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருதுகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

ஈஷா பசுமை பள்ளி இயக்கம், தமிழக பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து ‘பசுமை பள்ளி’ என்னும் சுற்றுச்சூழல் திட்டத்தை 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மரக் கன்று வளர்ப்பு மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 300 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மரக் கன்று மற்றும் சுற்றுச்சூழல் களப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈஷா பசுமை பள்ளி இயக்கம் மற்றும் தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட பசுமை பள்ளி இயக்கத்தின் 3-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் விழா தாம்பரம் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன், ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ரப்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

35 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருதுகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

சத்குரு தலைமையில் செயல்படும் ஈஷா மையம், மரக் கன்று வளர்க்கும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறது. மரங்கள் வளர்ப்பதால் என்ன பயன் விளையும் என்பதை எல்லாரும் உணர்ந்து கொண்டு இருக்கிறோம்.

இதை செயல்படுத்தும் முறையை ஈஷா பசுமை பள்ளி இயக்கமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருகிறது. மரங்களால்தான் நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.மனிதர்களுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும் மரங்கள் மிக அவசியம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்த இயக்கத்தின் மூலம் 45 லட்சம் மரங்களை மாணவர்கள் நட்டுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

முன்னதாக, காலையில் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் எனது பங்கு என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியும் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x